

திருச்சி: ஒருமாதத்தில் அதிகபட்சமாக ரூ.8,400 மட்டுமே ஊதியமாக பெறுவதால், குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் காவல் துறையினருக்கு உதவி செய்யும் செய்யும் வகையில் 1962-ம் ஆண்டு ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இருந்தும், அதற்கான ஆசை நிறைவேறாதபோது, பலர் ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை செய்து வருகின்றனர். காவல் துறையினரை போலவே இவர்களுக்கும் தனிச் சீருடை வழங்கப்படுகிறது.
இதில், தமிழகத்தில் 16,500 ஊர்க் காவல் படை வீரர்கள் உள்ளனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். காவல்துறைக்கு உண்டான அனைத்து தகுதிகளும் உடையவர்களே ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஊர்க்காவல் படை வீரர்களை பொறுத்தவரை காவல் துறையுடன் இணைந்து ரோந்து செல்வது, போக்குவரத்தை சீர்செய்வது, விஐபி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, திருவிழா, பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 15 நாட்களும், குறைந்தபட்சம் 10 நாட்களும் பணி வழங்கப்படுகிறது. ஒருநாள் பணிக்கு, ரூ.560 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதனால், அதிகபட்சமாக 15 நாட்களுக்கு ரூ.8,400 மட்டுமே மாத ஊதியமாக கிடைக்கிறது. அதுவும் குறித்த நேரத்தில் ஊதியம் வருவதில்லை.
விலைவாசி விண்ணை முட்டும் தற்போதைய காலகட்டத்தில், இந்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாமல் திணறுகின்றனர். ஆரம்பத்தில், ஏராளமான பேர் ஆர்வத்துடன் ஊர்க்காவல் படை பணியில் சேர்ந்து விட்டு, பின்னர் குடும்ப வறுமை காரணமாக வருத்தத்துடன் பணியை விட்டு விலகி வருகின்றனர். இதனால், ஊர்க்காவல் படையினர் எண்ணிக்கை நிலையற்றதாக இருக்கிறது.
இவர்களின் நிலையை அறிந்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களது தேர்தல் அறிக்கையில், ‘‘ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பணி நாட்கள் அதிகரிக்கப்படும். ஊதியமும் உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் இதுவரை தங்களை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை என ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஊர்க்காவல் படை வீரர்கள் சிலர் கூறியபோது, ‘‘மக்களுக்கு தொண்டாற்றும் வாய்ப்பை அளிக்கும் கவுரவமான பணி என்பதால் எங்களது வறுமையை பொறுத்துக் கொண்டு, பணிசெய்து வருகிறோம். எப்போது பணிக்கு அழைப்பார்கள்? என்பது தெரியாததால், வருமானத்துக்காக வேறு வேலைக்கும் செல்ல முடியவில்லை.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களது ஒருநாள் ஊதியம் ரூ.560 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின் ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ஊர்க்காவல் படை வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் மாதந்தோறும் 20 நாட்களுக்கு குறையாமல் பணி வழங்க வேண்டும். நாளொன்றுக்கு ரூ.1,000 ஊதியமாக வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கின்றனர்.