“செங்கோட்டையன் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு எதுமில்லை, ஏனெனில்...” - செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ | கோப்புப்படம்
செல்லூர் ராஜூ | கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும், பொதுச் செயலாளர் கே.பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. அப்புறம் எதற்கு அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கோபமாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமிக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லாதது குறித்து அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகளிடம்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அதிமுகவையும், பொதுச் செயலாளர் கே.பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. நிகழ்ச்சி நடத்தியது அதிமுக இல்லை. விவசாயிகள் சங்கம்.

அதனால், அவரது கருத்தால் அதிமுகவில் சலசலப்பு எதுவும் ஏற்படவில்லை. இதை பெரிதாக எடுத்துக் கொண்டு திமுகவின் கைக்கூலியாக இருக்கக்கூடியவர்கள், பணத்தை வாங்கி கொண்டு ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இந்த இயக்கத்துக்கு சிறு ஊறு விளைவிக்கலாம் என நினைக்கிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போல் கே.பழனிசாமி அதிமுகவை வலுவாக கொண்டு செல்கிறார். அடுத்த முதல்வர் கே.பழனிசாமி என்பதை மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதிமுகவையும், கே.பழனிசாமியையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக எங்களுக்குள் ஏதாவது செய்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு இடத்துக்கும் முதல்வர் போகிறார். அவரது சொந்த பணத்திலா செல்கிறார்? மக்களுடைய அரசு பணத்தில் செல்கிறார். முதல்வரை வரவேற்க அமைச்சர்கள் பணம் கொடுத்து ஆட்களை திரட்டி வருகின்றனர். ஆனால், எதிர்கட்சியாக இருக்கிற கட்சித் தலைவரை, பொதுமக்கள் விவசாயிகள் அழைத்து பாராட்டு விழா நடத்துகிறார்கள். அதை ஆளும்கட்சியினரால், பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அத்திக்கடவு - அவினாசி திட்டம் மட்டுமில்லாது, தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது போன்ற எண்ணற்ற திட்டங்களை விவசாயிகளுக்காக அதிமுக அரசும், அதன் முதல்வராக இருந்த கே.பழனிசாமியும் சாதித்துக் காட்டியுள்ளார். காவேரி காப்பாளன் என்ற பெருமையை விவசாயிகள், பழனிசாமிக்கு கொடுத்துள்ளனர். 4 ஆண்டுகள் 3 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், கே.பழனிசாமி மக்களின் உள்ளத்தையும் கவர்ந்தள்ளார். அவரது நற்பெயருக்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு அதிமுகவுக்கு எதிராக எதையாவது தூண்டிவிட பார்க்கிறார்கள். அப்புறம் எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்?” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in