Published : 11 Feb 2025 04:29 PM
Last Updated : 11 Feb 2025 04:29 PM
தினசரி 4 லட்சம் பயணிகள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில், 4 பெஞ்சுகள் மட்டுமே உள்ளதால், பயணிகள் தரையில் அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் ஏற வரும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்றனர். சென்னை சென்ட்ரல் புறநகர் முனையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, நெல்லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
வேலை, கல்வி, சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனைய வளாகத்தில் உள்ள பொதுத் தளத்தில் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. வெறும் 4 பெஞ்சுகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால், பயணிகள் தரையில் அமருகின்றனர். இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
இதுகுறித்து, பயணிகள் சிலர் கூறியதாவது: பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் முனையத்துக்கு தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இவ்வாறு வரும் பயணிகள் அமர போதிய இருக்கை வசதிகள் இல்லை. குறைவான இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளதால், பலர் தரையில் அமருகின்றனர். குறிப்பாக, வழியில் அமர்ந்து கொள்கின்றனர்.
இதனால், ரயில் ஏற வரும் பயணிகளுக்கும், இறங்கிச் செல்லும் பயணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. பலர் ரயிலை தவறவிடும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் நோயாளிகளும் அமர்வதற்கு இருக்கை கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மேலும், கடந்த சில மாதங்களாக அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் தினமும் காலதாமதமாக இயக்கப்படுவதால் ரயில் ஏறவரும் பயணிகள் கால்கடுக்க ரயில் நிலையத்தில் காத்து நிற்கின்றனர். அப்போது, அமர்வதற்கு இருக்கை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
மேலும், சில பயணிகள் தரையில் உட்கார்ந்து கொண்டு வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை அங்கேயே வைத்து உண்கின்றனர். உண்ட பிறகு அந்த இடத்தை அவர்கள் முறையாக சுத்தப்படுத்துவது கிடையாது. இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
அத்துடன், அங்கு கூட்ட நெரிசலும் ஏற்படுகிறது. மேலும், ரயில்வே அதிகாரிகளும் அவ்வபோது இங்கு வந்து ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் கீழ்நிலை அதிகாரிகள் பயந்து பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வார்கள்.
ஆனால், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்வது கிடையாது. எனவே, பயணிகளின் நலன் கருதிபோதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பயணிகள் கூறினர். இப்பிரச்சினை தொடர்பாக ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியானபோது, அதிகாரிகள் கணக்குக்காக 4 பழைய சேர்களை கொண்டு வந்து போட்டனர்.
அதையும் சிறிது நாட்களில் திருப்பி எடுத்து சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ரயில்வே நிர்வாகம் பயணிகளை துச்சமாக நினைக்கிறதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT