Published : 12 Jul 2018 07:44 AM
Last Updated : 12 Jul 2018 07:44 AM

ஆக.15-ல் ரயில்வே காலஅட்டவணை: தாம்பரத்தில் இருந்து கூடுதலாக 2 ரயில் சேவை தொடங்க வாய்ப்பு

தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மேலும் 2 புதிய ரயில்கள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு இதில் இடம் பெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களின் காலஅட்டவணையை ஆண்டுக்கு ஒருமுறை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. ரயில்களின் நேரம் மாற்றம், புதிய ரயில்களுக்கு நேரம் நிர்ணயம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு காலஅட்டவணை தயாரிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டிலும் அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் திறக்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து மேலும் 2 ரயில்களின் சேவையை தொடங்குவதற்கான அறிவிப்பு அதில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில் மின்மயமாக்கல், இரட்டை வழிபாதை அமைத்தல், அகலப்பாதை அமைத்தல் போன்ற பணிகளில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை - கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் மதுரை வரை இரட்டை பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் முன்பைவிட விரைவாக செல்கின்றன. மேலும், கூடுதலாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் புதிய காலஅட்டவணை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிடப்பட்டு, மறுநாளே அமலுக்கு வரவுள்ளது. இதில், முக்கிய விரைவு ரயில்களின் வருகை அல்லது புறப்பாடு 10 முதல் 20 நிமிடங்கள் வரை மாற்றம் இருக்கும். மேலும், தாம்பரத்தில் இருந்து கூடுதலாக 2 ரயில்களின் சேவையை தொடங்குவதற்கான அறிவிப்பும் அட்டவணையில் இடம் பெறும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x