Published : 11 Feb 2025 12:02 PM
Last Updated : 11 Feb 2025 12:02 PM
கரூர்: கரூர் திருச்சி ரயில் வழித்தடத்தில் கரூர் மாவட்டம் திருகாம்புலியூர் பகுதியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் எர்ணாகுளம் காரைக்கால் விரைவு ரயில் சிவப்புக் கொடி காட்டி 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாக நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பிறகு 1 மணி நேரம் தாமதமாக ரயில்கள் புறப்பட்டு சென்றன.
கரூர் திருச்சி ரயில் வழித்தடத்தில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள திருக்காம்புலியூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இன்று (பிப். 11ம் தேதி) விரிசல் ஏற்பட்டிருந்தது. அப்பகுதியில் வசிக்கும் ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி காலைக் கடன் கழிப்பதற்காக அவ்வழியே சென்றப்போது தண்டவாளத்தில் உள்ள விரிசலை பார்த்து இதுகுறித்து தண்டவாள பராமரிப்புப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் எர்ணாகுளம் காரைக்கால் விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் சிவப்புக்கொடி காட்டி எர்ணாகுளம் காரைக்கால் விரைவு ரயிலை தண்டவாள விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு சுமார் 100 மீட்டர் தூரத்தில் முன்பாக 6.45 மணிக்கு நிறுத்தினர். இதனால் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது.
மேலும் வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி விரைவு ரயில் மாயனூர் ரயில் நிலையத்திலும், கரூர் திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில் வீரராக்கியம் ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் தற்காலிகமாக சீரமைத்த பின்னர் இடையில் நின்றதால் எர்ணாகுளம் காரைக்கால் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இதையடுத்து சீரமைப்புப் பணிகள் தொடரும் நிலையிலேயே மற்ற இரு ரயில்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. அனைத்து ரயில்களும் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டன. திடீரென ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT