Published : 11 Feb 2025 06:24 AM
Last Updated : 11 Feb 2025 06:24 AM

தமிழகத்தில் ஆட்பேசம் இல்லாத புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86,000 பேருக்கு பட்டா: அமைச்சரவை ஒப்புதல்

சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள், பல்வேறு நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மாநில, மாவட்ட அளவில் குழு அமைத்து உடனடியாக பணிகளை தொடங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வரும் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் ஆகியவை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், பட்ஜெட் ஒதுக்கீடுகள், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இதில், பட்ஜெட்டுடன் வருவாய்த் துறை தொடர்பான திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:

சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என்று கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். இவ்வாறு ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர் பட்டா இன்றி குடியிருக்கின்றனர். இது முதல்வரின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, இவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார்.

பெல்ட் ஏரியா சட்டம் கடந்த 1962-ம் ஆண்டு வந்தது. 1962 முதல் 2025 வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பட்டா வழங்கும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார். 4 மாவட்ட மக்களுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதம்.

மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும் இதேபோல பிரச்சினை இருக்கிறது. அங்கு இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வரும் 57,084 பேருக்கு பட்டா வழங்க அறிவறுத்தியுள்ளார்.

அந்த வகையில், சுமார் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களுக்குள் பட்டா வழங்குமாறு முதல்வர் கூறியுள்ளார். இதுதவிர, யாராவது விடுபட்டிருந்து மனுக்கள் கொடுத்தால் அதையும் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆட்சியில் இதுவரை 10.26 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்துக்குள் 6.29 லட்சம் பேருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த ஒரு தனி மனிதருக்கும் குடியிருக்க இடமோ, வீடோ இல்லாமல் இருக்க கூடாது என்ற உணர்வுடன் முதல்வர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய முடிவாக இருக்கும்.

நீர்நிலை புறம்போக்கு, மேய்க்கால் நிலம் போன்ற ஆட்சேபத்துக்கு உரிய இடங்களில் பட்டா வழங்கப்படாது. நீதிமன்றமே அதற்கு தடை விதித்துள்ளது. அதேநேரம், அரசால் வழங்க முடிவெடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படுகிறது. இதுகுறித்து நாங்களே கணக்கெடுத்துள்ளோம். அங்கு வசிக்கும் மக்களுக்கும் தெரியும். ஒருவேளை விடுபட்டிருக்கும் பட்சத்தில் விண்ணப்பித்தால், அதற்கான குழு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

எது பெல்ட் ஏரியா? - சென்னையை சுற்றியுள்ள அரசு நிலம் மற்றும் நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், எதிர்கால தேவை கருதியும் கடந்த 1962-ல் ‘பெல்ட் ஏரியா’ அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை சுற்றி 32 கி.மீ.க்கு பெல்ட் ஏரியா என குறிப்பிடப்பட்டு, இப்பகுதியில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இப்பகுதியில் உரிய தகுதிகளை நிறைவு செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

63 ஆண்டு பிரச்சினைக்கு தீர்வு: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் ‘பெல்ட் ஏரியா’க்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், மாவட்ட தலைநகர பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86,000 ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கி உள்ளோம். 6 மாதங்களில் இதை செய்து முடிக்க 2 குழுக்களையும் அமைக்க உள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x