Published : 11 Feb 2025 01:17 AM
Last Updated : 11 Feb 2025 01:17 AM

டெல்லியில் அதிமுகவுக்கு புதிய அலுவலக கட்டிடம்: காணொலி மூலம் பழனிசாமி திறந்து வைத்தார்

டெல்லியில் அதிமுகவின் புதிய அலுவலகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்துவைத்தார். உடன் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள். (அடுத்த படம்) டெல்லியில் திறக்கப்பட்டுள்ள அதிமுக அலுவலகம். படம்: எஸ்.சத்தியசீலன்

அதிமுக சார்பில் புதுடெல்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டிடத்தை காணொலி வாயிலாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார்.

புதுடெல்லியில் அதிமுக அலுவலகம் திறக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். இதன்படி, புதுடெல்லியில் எம்.பி.சாலை, சாகேத் பகுதியில் 10 ஆயிரத்து 850 சதுரடி பரப்பு கொண்ட இடத்தை கடந்த 2012-ம் ஆண்டு மத்திய அரசிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வாங்கினார். அவரால் கடந்த 2015-ம் ஆண்டு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் அங்கு தொடங்கப்பட்டது. சுமார் ரூ.10 கோடியில் 13 ஆயிரத்து 20 சதுர அடி பரப்பில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக புதுடெல்லி அலுவலகத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி திறந்துவைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், "தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கட்சி அதிமுக. அதன் அலுவலகத்தை புதுடெல்லியில் திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டிடத்துக்கு 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - புரட்சித் தலைவி அம்மா மாளிகை' என பெயரிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, செம்மலை, பா.வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், டி.ஜெயக்குமார், எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x