

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் இன்று (பிப். 11) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விமரிசையாக நடந்து முடிந்தன. இந்தப் போட்டிகளில் தென் மாவட்டங்களில் வளர்க்கப்படும் அனைத்துக் காளைகளுக்கும் வாய்ப்பு வழங்க முடியவில்லை என்றும் வெளியூர் பார்வையாளர்கள் பலரால் போட்டிகளைப் பார்க்க முடியவில்லை என்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே ஆதங்கம் இருந்தது.
இதையடுத்து, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் இன்று (பிப். 11) ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார். 1,000 காளைகளை களமிறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குகிறது. போட்டியில் பிடிபடாத காளைகளுக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் பல்வேறுவிதமான பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.