Published : 11 Feb 2025 12:26 AM
Last Updated : 11 Feb 2025 12:26 AM

உலகமே ஏற்றுக்கொண்டாலும் பெரியாரை நான் தொடர்ந்து எதிர்ப்பேன்: சீமான் திட்டவட்டம்

‘உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும், நான் தொடர்ந்து எதிர்ப்பேன்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ஈரோடு இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள்கூட தேர்தலில் டெபாசிட் இழந்துள்ள வரலாறுகள் உண்டு. ஈரோட்டில் பெரியாருக்காக யாரும் வாக்களிக்கவில்லை. காந்திக்கு(காந்தி படம் போட்ட ரூபாய் நோட்டு)தான் வாக்களித்துள்ளனர்.

பாஜகவின் வாக்குகள் எங்கள் கட்சிக்கு வந்துள்ளது எனக் கூறுவது தவறானது. நாம் தமிழர் கட்சி வளர வேண்டும் என்று பாஜகவும், அதிமுகவும் எப்படி நினைப்பார்கள்? திராவிட கட்சிகளுக்கும், தேசிய கட்சிகளுக்கும் நான் எதிரானவன். என்னை முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கும் என்று கூறுவது யூகம்தான்.

பெரியார் குறித்து நான் அதிகமாக பேசிவிட்டேன் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நானும் பெரியார் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்தேன். பெரியாரின் கொள்கை கொண்டாடப்பட வேண்டியது அல்ல, துண்டாடப்பட வேண்டியது என்று தெரிந்த பிறகு எதிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஈழத்தில் நேதாஜி, எம்ஜிஆர் படங்கள் இருந்தன. ஆனால், பெரியார் படம் இல்லை. விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டும் என நினைத்தது திராவிடம். பிரபாகரன் உட்பட உலகமே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும், நான் ஏற்கமாட்டேன். தொடர்ந்து எதிர்ப்பேன். என்னை பின்பற்றுபவர்கள் பெரியார்தான் வேண்டுமென்றால், என்னை விட்டு விலகிச் செல்லலாம்.

மத்திய அரசு நிதி தரவில்லை என புலம்புவதற்காக 40 பேரை தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இந்தியாவின் வரி வருவாயை பெருக்குவதில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நான் தமிழக முதல்வரானால், தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால், மத்திய அரசுக்கு வரி கொடுக்கமாட்டேன். இதைச் செய்ய தமிழக அரசுக்கு துணிவிருக்கிறதா? தமிழக அரசின் கையில் கறையிருப்பதால்தான் மத்திய அரசுடன் சண்டையிட முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x