Published : 10 Feb 2025 06:04 PM
Last Updated : 10 Feb 2025 06:04 PM
கடலூர்: பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் நேரில் ஆஜராக சீமானுக்கு வடலூர் போலீஸார் சம்மன் கொடுத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 8-ம் தேதி வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், பெரியாரைப் பற்றி சில கருத்துகளை கூறினார்.
இந்த கருத்துகள் அனைத்தும் அவதூறு கருத்துக்கள் என பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் இது குறித்து புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் வடலூர் காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் போலீஸார் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பேசுவது, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் விதமாக பேசுவது ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் பேரில் இன்று (பிப்.10) சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டுக்குச் சென்ற வடலூர் போலீஸார் சம்மனை வழங்கினர். அதில், வரும் வெள்ளிக்கிழமை 14-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT