ஊதிய முரண்பாடுகளை 8-வது ஊதியக் குழுவில் களைய வேண்டும்: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு

ஊதிய முரண்பாடுகளை 8-வது ஊதியக் குழுவில் களைய வேண்டும்: அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் கூட்டமைப்பு
Updated on
1 min read

சென்னை: ‘‘7-வது ஊதியக் குழுவில் களையப்படாமல் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை 8-வது ஊதியக் குழுவில் தீர்க்க வேண்டும்’’ என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீ குமார், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: ‘மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கான 8-வது மத்திய ஊதியக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கும். எனவே, 8-வது ஊதியக் குழுவுக்குப் பாதுகாப்புத் துறை சார்பில் அளிக்கும் பரிந்துரையில் பின்வரும் கோரிக்கைகளைச் சேர்க்க வேண்டும்.

பாதுகாப்புத் துறையில் சீருடை பணியாளர்களுக்குச் சமமாக, சிவில் ஊழியர்களும் பல்வேறு ஆபத்துக்களைச் சந்தித்து பணிபுரிந்து வருகின்றனர். கரோனா தொற்றுக் காலத்தில் நாடே ஊரடங்கால் முடங்கி இருந்த நிலையில், பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு உதவும் வகையில் இரவும், பகலும் பணியில் ஈடுபட்டனர். எனவே, பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்குக் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கான ஊதிய உயர்வை அளிக்கப் பரிந்துரைக்க வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை 2026 ஜன. 1-ம் தேதி முதலே அமல்படுத்தப் பரிந்துரைக்க வேண்டும்.

7-வது ஊதியக் குழுவில் களையப்படாமல் உள்ள ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைத் தீர்க்க வேண்டும். ஓய்வூதியம், இறப்பு மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்தப் பரிந்துரைக்க வேண்டும். அடிப்படை ஊதியத்துடன் 50 சதவீத அகவிலைப் படியைச் சேர்க்க வேண்டும்.

முப்படை வீரர்கள் பணியின் போது உயிரிழந்தால், அவர்கள் நாட்டுக்காக வீரமரணம் அடைந்தாக மரியாதை செலுத்தி அதற்குரிய சலுகைகள் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல், பாதுகாப்புத் துறை சிவில் ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால், அவர்களும் வீரமரணம் அடைந்ததாகக் கருதி அவர்களது குடும்பத்தினருக்கு அதற்கான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.

ரயில்வேயில் உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு 100 சதவீதம் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவதைப் போல், பாதுகாப்புத் துறையில் உயிரிழக்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கான காப்பீடு மற்றும் பணி நேரத்தில் ஏற்படும் விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்புக் காப்பீடு ஆகியவற்றை உரிய ஆய்வு செய்து உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in