Published : 10 Feb 2025 03:25 PM
Last Updated : 10 Feb 2025 03:25 PM
சென்னை: “மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்” என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மணிப்பூரில் கும்பல் வன்முறைகளைத் தூண்டிவிட்டு, ஏராளமான மனித உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த பிரேன் சிங் முதல்வர் பதவியிலிருந்து விலகியுள்ளார். குறிப்பாக மணிப்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்புள்ள முதல்வர், அதற்கு மாறாக கும்பல் வன்முறையைத் தூண்டிவிட்டு நடத்தினார் என்பதற்கான சாட்சியங்கள் உச்சநீதிமன்ற விசாரணையில் வெளிப்பட்டுள்ளன.
சிறுபான்மைப் பிரிவினர் மீது வெறுப்புணர்வோடு பேசிய ஒலிப்பதிவு அம்பலப்பட்டு, அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ள நிலையில் பிரேன்சிங் பதவி விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிரேன் சிங் முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தந்த அழுத்தமும் இந்த பதவிவிலகலுக்கு காரணமாகியிருக்கின்றன. மணிப்பூர் கலவரங்கள் தொடங்கியது முதலே பிரேன் சிங் பதவி விலக வேண்டும், மோடியும் அமித்ஷாவும் மணிப்பூரில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டன.
மணிப்பூர் மக்கள் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகி வந்தார்கள். தற்போதும் நிலை மேம்பட்டதாகத் தெரியவில்லை.மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தால் 220-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 60,000-க்கு மேற்பட்ட மக்கள் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த அவலம் ஏற்பட்டது. அரசின் நிவராண முகாம்களில் தங்கியிருந்தவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்.
பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு ஆளானார்கள். அரசின் ஆதரவிலும் பாராமுகத்திலும்தான் இந்த கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அப்போதும் மத்திய பாஜக அரசும், மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்கும் வேடிக்கைத்தான் பார்த்தார்கள். மக்களை பிளவுபடுத்தி அவர்களின் மரணத்தின் மீது ஆட்சிசெய்யும் பாஜகவின் பாசிச அரசியலுக்கு மணிப்பூரே சாட்சி. பிரேன் சிங் மட்டுமல்ல அவரை பாதுகாத்து கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
அடுத்து யார் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர்கள் அந்த மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும். இனியாவது பாஜக அரசு திருந்தி மணிப்பூர் மக்களிடம் அமைதியும் நிம்மதியும் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். மணிப்பூரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை விசாரிக்க நடுநிலையான ஆன தனி ஆணையத்தை அமைக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT