“அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர இபிஎஸ் கடும் முயற்சி” - அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்
அமைச்சர் ரகுபதி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அதிமுக அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்பதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே, எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்” என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (பிப்.10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவுற்றிருக்கிறது. திறப்புவிழாதான் நடத்தப்பட வேண்டும். இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். எங்களுடைய அமைச்சர் முத்துசாமியும் அதை தொடர்ந்து கூறி வருவது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அதிமுக அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்பதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே, எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.

சீமான் மீதான அவதூறு வழக்குகளைக் கொண்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில், அவர் நீதிமன்றத்துக்குத்தான் வரவேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுதொடர்பான வழக்குகள் நடக்கும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்று எதுவும் வரவில்லை. தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். புதிதாக ஒரு மதக் கலவரத்தை யார் உருவாக்க நினைத்தாலும், அதற்கு தமிழக அரசு இடம் கொடுக்காது. நாங்கள் அனைவரையும் சமமாக பார்ப்பவர்கள்தான். நாங்களும் முருக பக்தர்கள்தான். முருகன் எங்களுக்கும் வேண்டியவர்தான். எனவே, யாரும் யாரையும் ஏமாற்றிவிட முடியாது. அந்த பிரச்சினையை தமிழக முதல்வர் சுமுகமாக தீர்ப்பார்” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in