Published : 10 Feb 2025 01:23 PM
Last Updated : 10 Feb 2025 01:23 PM
சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனன் கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸாரால் விசாரணக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை. இதனிடையே தருமபுரி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக நிலுவையில் இருத்த வழக்கில் அவர் இறந்துவிட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் தன்னுடைய தந்தையின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதால் ரூபாய் 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் அர்ஜுனனின் மகன் சதிஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் போலீஸார் தரப்பில் தாக்கல் செய்த அர்ஜுனனின் இறப்பு சான்றிதழ் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால், அவர் இயற்கையாக மரணமடைந்தாரா? அல்லது போலீஸார் தாக்கி உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.அரசு தரப்பில், 30 ஆண்டுகளுக்கு பிறகு இதுதொடர்பாக, விசாரணை நடத்த முடியாது. போலீஸார் தாக்கி தான் மரணமடைந்தார் என்பதாக இதுவரை எந்த புகாரும் இல்லை.எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கபட்டது.
அரசு தரப்பு வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜுனனின் மரணம் குறித்து விசாரிக்க உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT