Published : 10 Feb 2025 08:37 AM
Last Updated : 10 Feb 2025 08:37 AM
சென்னை: கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் தவெக வடசென்னை மாவட்டம் சார்பில் 33-வது விலையில்லா விருந்தகத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்து வைத்தார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, விஜய்யை ஆட்சியில் அமர வைப்போம் என்று உறுதியுடன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் 32 இடங்களில் விலையில்லா விருந்தகம் செயல்படுகிறது. இங்கு தினமும் காலையில் சுமார் 200 பேருக்கு இட்லி, வடை, பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. சில இடங்களில் மதியமும் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தவெக வடசென்னை மாவட்டம் சார்பில் கொடுங்கையூர் எம்.ஆர் நகரில் 33-வது விலையில்லா விருந்தகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், விலையில்லா விருந்தகத்தை பொதுச் செயலாளர் ஆனந்த் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளி மிதிவண்டி, 200 பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தினந்தோறும் மக்களுக்கு ஏதாவது ஒரு உதவி செய்துகொண்டு இருக்கும் ஒரே கட்சி தவெகதான். ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என வடிவங்கள் மாறினாலும், கடந்த 31 ஆண்டுகளாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். மக்களோடு மக்களாக நின்று உழைக்கிறோம்.
கொடுங்கையூரில் தற்போது 33-வது விலையில்லா விருந்தகம் திறந்துள்ளோம். இதேபோல, தமிழகம் முழுவதும் 397 இடங்களில் விலையில்லா முட்டை, ரொட்டி, பால் திட்டத்தை நடத்தி வருகிறோம். குறுதியகம், விழியகம், பயிலகம், நூலகம், சட்ட ஆலோசனை மையம், தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டம் என தவெகவில் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைவரது உழைப்பாலும்தான் தவெக உருவாகியுள்ளது. தலைவர் விஜய் எங்களை நல்ல முறையில் வழிநடத்துகிறார். அவர் சொல்வதை நிர்வாகிகள் செய்கின்றனர். 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் எங்கள் இலக்கு. அதில் வெற்றி பெற்று, தவெக தலைவர் விஜய்யை ஆட்சியில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்டச் செயலாளர்கள் தி.நகர் அப்புனு, அம்பத்தூர் பாலமுருகன், நிர்வாகிகள் கட்பீஸ் விஜய், பிரபு, ஜெகன், நவீன், பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT