Published : 10 Feb 2025 06:44 AM
Last Updated : 10 Feb 2025 06:44 AM
சென்னை: அரசு மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் வகையில் அரசாணை 354-ஐ அமல்படுத்தக் கோரி இறுதிவரை போராடியவர் அரசு மருத்துவர் லட்சுமி நரசிம்மன். இவர் கடந்த 2020 பிப்.6-ம் தேதி உயிரிழந்தார்.
இதுவரை இந்த அரசாணையும் அமலாகவில்லை. இந்த பின்னணியில் ‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா?’ என்ற தலைப்பில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 7-ம் தேதி வெளியானது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி வெளியிட்ட அறிக்கையில், “அரசாணை 354-ஐ அமல்படுத்துவது குறித்து மருத்துவ சங்கங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தீர்வு எட்டப்படவில்லை. இதுகுறித்து ஒற்றுமையுடன் ஒருமித்த கருத்தை தெரிவித்தால் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க அமைச்சர் உத்தரவிட்டும், இதுவரை அவர்கள் ஏற்க முன்வரவில்லை. மேலும் பணியின்போது உயிரிழந்த லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட 6 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி, கடந்த ஜன.10-ம் தேதி வழங்கப்பட்டது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மறைந்த லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழை தொடர்பு கொண்டு கூறியதாவது: எங்கள் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி கொடுத்ததாகவும், பணி நியமன ஆணை வழங்கியதாகவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளார். இப்படி உண்மைக்கு மாறான தகவலை, இப்படி வெளிப்படையாக சொல்வதற்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது. நான் அவரை தொடர்பு கொண்டு கேட்டாலும் சரியான விளக்கம் அளிக்கவில்லை. அப்படியே ரூ.1 கோடி வழங்குவதாக இருந்தாலும் அது அரசு பணம் இல்லை. ஒவ்வொரு அரசு மருத்துவரும் மாதம்தோறும் தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்கும் தொகையாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் ரூ.1 கோடியும் கொடுக்கவில்லை. பணிநியமன ஆணையும் வழங்கவில்லை. இந்த இரண்டையும் நாங்கள் கோரியதும் இல்லை. உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்ததற்காக நீதிமன்றம் செல்ல இருக்கிறேன். எனது கணவரின் இலக்கான அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், போராட்டக் குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை வெளியிட்ட அறிக்கை: மறைந்த லட்சுமி நரசிம்மன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கியதாகவும், அரசு வேலை வழங்க முன்வந்ததாகவும் ஜெ.சங்குமணி கூறியது முற்றிலும் தவறான தகவல். அரசாணை 354-ஐ அமல்படுத்த அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களுமே வலியுறுத்தியுள்ளன. ஒருமித்த கருத்து இல்லை என்பது அப்பட்டமாக தவறான தகவல். இதனை உடனடியாக அவர் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். முதல்வர் தலையிட்டு அரசாணை 354-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எங்கள் போரட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், தற்போது ஆட்சிக்கு வந்தும் இதுவரை தன் தந்தையின் அரசாணையை நிறைவேற்றவில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணியின் விளக்கத்துக்காக காத்திருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT