தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் எனும் அறநிலையத் துறை உத்தரவுக்கு இமக கண்டனம்

தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் எனும் அறநிலையத் துறை உத்தரவுக்கு இமக கண்டனம்
Updated on
1 min read

மதுரை: மதுரையில் தண்டாயுதபாணி கோயிலில் அர்ச்சகர்களின் தட்டு காணிக்கையை உண்டியலில் போட உத்தரவிட்ட அறநிலையத்துறை செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "மதுரை நேதாஜி ரோட்டில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களாகவே விரும்பி அர்ச்சகர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்துமாறு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் அர்ச்சகர்களின் தட்டுகளில் போடப்படும் காணிக்கைகள் உண்டியலில் போடும் பணி கோயில் மணியம் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தட்டு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது கோயில் அர்ச்சகர்களை அவமதிக்கும் செயலாகும். இந்த செயலை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு அறநிலையத்துறை சம்பளம் கொடுப்பது கிடையாது. காணிக்கை தட்டில் பக்தர்கள் விருப்பப்பட்டு போடும் காணிக்கைகள் தான் அவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. அப்படியிருக்கும் தட்டு காணிக்கையை உண்டியலில் போடவேண்டும் என திடீரென உத்தரவிட்டால் காலம் காலமாக கோயிலில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

இந்தச் செயல் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது. தண்டாயுதபாணி முருகன் கோயிலில் தீபாராதணை தட்டில் விழும் காணிக்கை எப்போதும் போல் அர்ச்சகர்களுக்கே சொந்தம். இதனால் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த கோயில் செயல் அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும். தவறினால் இந்து மக்கள் கட்சி சார்பில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in