‘‘மின்சார வாரியத்தில் 39 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?’’ - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

‘‘மின்சார வாரியத்தில் 39 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?’’ - தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
Updated on
1 min read

சென்னை: திமுக அரசு பொதுமக்களை ஏமாற்றி, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக மின்சார வாரியத்தில், சுமார் 39 ஆயிரம் களப்பணியாளர்களுக்கான காலி பணியிடங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்காலிகப் பணியாளர்களை வைத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது மின்சார வாரியம். அவர்கள் பொதுமக்களிடம், ரூ.100 - ரூ.150 என கட்டணம் வசூலிக்கின்றனர். இது சட்டவிரோதமானது. கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், மின்சாரப் பராமரிப்பு தொடர்பான பணிகள் அதிகரிக்கும். பணி நியமனம் மேற்கொள்ளவில்லையென்றால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும்.

தேர்தல் வாக்குறுதியில், 3 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பப்படும், 2 லட்சம் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும் என்று இளைஞர்களை ஏமாற்றி, மாதம் ஒரு முறை மின்கட்டணம் என்று பொதுமக்களையும் ஏமாற்றி, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, எப்போதும், காலம் கடந்துதான் புத்தி வருமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in