நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி

நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கேள்வி
Updated on
1 min read

சென்னை: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது குறித்து பிப்.14-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாதது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சரத்சந்திரன் நுகர்வோர் நீதிமன்றங்களின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், கடந்தாண்டு இறுதிவரை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 3,900 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சென்னை மற்றும் மதுரை கிளையில் தலைவர்கள் மட்டுமே பணியில் இருப்பதாகவும், தேவையான உறுப்பினர்களோ, ஊழியர்களோ இல்லை என்றும், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், காலியிடங்களையும், ஆராய்ச்சி உதவியாளர்களையும் நிரப்புவது அத்தியாவசிய தேவை என்றும் கூறியிருந்தார்.

நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் மாநில அரசு ப்ளீடர் ஏ.எட்வின் பிரபாகர் ஆஜராகி, ‘‘மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் பதிவாளர் உள்பட 230 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டவை. இதில் 24 பணியிடங்கள் மட்டும் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என தெரிவி்த்தார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘மாநில குறைதீர் ஆணையத்தின் பணிச்சுமையை குறைக்க கூடுதலாக ஒரு உறுப்பினரை நியமிக்கக் கோரி அரசுக்கு ஆணையத்தின் தலைவர் கடந்த 2022 டிச.15 மற்றும் 2023 மார்ச் 20 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு, நிதி நெருக்கடி காரணமாக, கூடுதலாக ஒரு உறுப்பினரை நியமிக்க முடியாது என ஆணையத் தலைவருக்கு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கடந்த 2023 மே 5 அன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு கடந்த 22 மாதங்களாக இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிருப்தியளிக்கிறது. நுகர்வோர் நலனில் அரசுக்கு அக்கறையின்மையையே இது காட்டுகிறது. எனவே இதுதொடர்பாக பிப்.14-ம் தேதிக்குள் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமைச் செயலர் உரிய விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை பிப்.20-க்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in