“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதநல்லிணக்கத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - பெ.சண்முகம்

பெ.சண்முகம் | கோப்புப்படம்
பெ.சண்முகம் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: “வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி பெரியாருக்கு இல்லை என்று கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாததால் திமுக அரசு மீது ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதேநிலை நீடித்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசுக்கு எதிரான நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள். அதற்கு முன்பாக கோரிக்கையை நிறைவேற்றினால்தான் மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியும். இல்லையேல், அதிருப்தியாளர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதனாலேயே கூட்டணி உடைந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் எங்களுக்கென்று தனி நிலைப்பாடு இருக்கிறது. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லா பிரச்சினையிலும் ஒத்துப்போக வேண்டிய அவசியம் இல்லை. வேங்கைவயல் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்ல, நாங்களும்தான் அதிருப்தியில் இருக்கிறோம். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வேங்கைவயலுக்கு செல்லவிருப்பதாக விஜய் கூறவில்லை.

பெரியாரைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுமத்தி வருகிறார். நீதிமன்றமே அவருக்கு அறிவுரை வழங்கிய பிறகு அவருக்கு நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி பெரியாருக்கு இல்லை என்று கூறிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஈரோடு இடைத்தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?.

வன விலங்குளால் பயிர்கள் அழிக்கப்படும்போது, அதை இயற்கை பேரழிவாக கருதி முழு இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்குவதோடு, வன விலங்குகளை சாகுபடி பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொறுத்தவரையில், ஹெச்.ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியவை அனைத்தும் கண்டனத்துக்கு உரியது. மத நல்லிணத்தை காப்பாற்றும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வழிபாட்டு உணர்வை தங்களது அரசியல் லாபத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in