Published : 08 Feb 2025 07:02 PM
Last Updated : 08 Feb 2025 07:02 PM
காரைக்குடி: ‘டெல்லி தேர்தல் முடிவுகள் வருத்தம் அளிக்கிறது’ என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லூரியில் முன்னாள் மாணவரான மார்க்ஸிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியது: “டெல்லி தேர்தல் முடிவு வருத்தம் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு பின்பு இண்டியா கூட்டணி இருக்கிறதா? இல்லையா என்ற சந்தேகம் எழும் வகையில், அதன் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாகவே பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இதை எதிர்க்கட்சி தலைவர்கள் உணர வேண்டும்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பதைபோன்று பிற மாநிலங்களில் இல்லை. இந்திய அளவில் இண்டியா கூட்டணி வலுப்பெற கம்யூனிஸ்ட் முயற்சி செய்யும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி என்பது போட்டியே இல்லாத வெற்றி. இங்கு அதிமுக போட்டியிட்டு இருக்க வேண்டும். தமிழகத்தில் பல தேர்தல்களில் அத்துமீறல், முறைகேடு போன்ற போக்குகள் இருந்து கொண்டே இருக்கிறது. அது மாற்றப்பட்டு நேர்மையான, ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
அமெரிக்காவில் இருந்து கைவிலங்குடன் இந்தியர்களை அனுப்பியதை மத்திய அரசு கண்டிக்காமல் நியாயப்படுத்தியுள்ளனர். இதைப் பார்த்து இந்தியர்கள் கொதித்து போய் உள்ளனர். வன்மையான கண்டனத்துக்குரியது. எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுகீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. இது இந்திய ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குறித்து செய்திகள் வராத நாளே கிடையாது. மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்ற ஆசிரியர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
தமிழக அரசியலில் பிரபலமானவர்கள் பலர் வந்து சென்றுள்ளனர். ஆனால் அதிமுக, திமுக அழிந்தது இல்லை. அதேபோல நடிகர் விஜய் வந்துள்ளார். அதிமுக, திமுகவை விரும்பாதவர்கள் விஜயை விரும்புவர். அத்தகைய 3-வது இடத்தில் தான் விஜய் உள்ளார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக விஜய் வருவார் என்று நாங்கள் நம்பவில்லை.
மத்திய அரசு சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவமும், நிதி ஒதுக்கீடும் செய்கிறது. மொழி விஷயத்திலும் பாரபட்சம் காட்டுகிறது. மத்திய அரசு தமிழை ஆட்சி, அலுவல், வழகாடு மொழியாக மாற்ற வேண்டும். இதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
சீமான் நாகரிகமான வார்த்தைகளில் பேச வேண்டும். உச்ச நீதிமன்றம் எச்சரிக்கைக்கு பிறகாவது ஆளுநர் அரசியல்சாசனப்படி நடந்து கொள்ள வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு முருகன் மீதான பக்தி கிடையாது. இதன்மூலம் மதக்கலவரத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் பெறுவது தான். கடுமையாக பேசிய ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT