

சென்னை மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு 176 சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்ததால், சென்னையில் இருப்பது போன்று பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை அங்கும் ஏற்படுத்த வேண்டியிருந்தது.
அதற்காக கடந்த 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் ஆகியவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் எல்லை 426 சதுர கிமீ ஆக விரிவடைந்தது. ஆனால், அதே அளவுக்கு சென்னை மாவட்ட நிர்வாக எல்லை விரிவாக்கப்படவில்லை.
இதனால் சென்னை மாநகராட்சி, பல்வேறு திட்டப்பணிகளை 3 மாவட்ட ஆட்சியர்களையும் கலந்தாலோசித்து செயல்படுத்த வேண்டி இருந்தது. இதனால் 3 மாவட்டங்களிடையே நிர்வாக சிக்கல் நிலவியது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக, விரிவாக்கப்பட்ட சென்னை மாவட்டம் கடந்த 2018-ம் ஆண்டு உதயமானது.
சென்னை மாநகராட்சியுடன் மேற்கூறிய உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து 13 ஆண்டுகள் ஆகிறது. அப்பகுதிகள் சென்னை வருவாய் மாவட்டத்துக்குள் வந்து 7 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இந்த விரிவாக்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ள திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழும், சோழிங்கநல்லூர் தொகுதி செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழும், ஆலந்தூர் தொகுதி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகங்களின் கீழும் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த 16 தொகுதிகளே தொடர்கின்றன. தேர்தலின்போது, பிற மாவட்டங்களில் வரும் தொகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளே தேர்தல் அலுவலர்களாக திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கீழ் பணியாற்ற வேண்டியுள்ளது. தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு அந்தந்த ஆட்சியர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்குவது, பணியாளர்களை ஒதுக்குவது போன்றவற்றை அம்மாவட்டங்களே செய்கின்றன.
ஆண்டுதோறும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம், வீடு வீடாக கள ஆய்வு செய்வது போன்றவை குறித்து, சென்னை மாநகராட்சியில் பணியாற்றிக்கொண்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களிடமே அறிக்கை அளிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் மாநகராட்சியின் அன்றாட பணிகளையும் கண்காணிக்க வேண்டியுள்ளது.
இது நிர்வாக அளவில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க மேற்கூறிய 6 தொகுதிகளையும் சென்னை மாவட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என அத்தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “6 தொகுதிகளை சென்னை மாவட்டத்தில் இணைப்பது குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், நிறை, குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் தொகுதியானது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்ட பகுதிகளில் வருகிறது. மதுரவாயல் தொகுதியும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் வருகிறது.
அதனால் அத்தொகுதிகளை எந்த மாவட்டத்தில் சேர்ப்பது என்பது சிக்கலாக உள்ளது. விரைவில் தீர்வு காணப்படும்” என்றனர். இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் கேட்டபோது, 6 தொகுதிகளை சென்னை மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் கடிதம் கொடுத்துள்ளன. அது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.