Published : 08 Feb 2025 06:26 AM
Last Updated : 08 Feb 2025 06:26 AM
சென்னை: தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்னும் விசிகவின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமூக ஊடகங்களில் இன்றைக்கு பாலியல் தொடர்பான வீடியோக்கள் பரப்பப்படுகின்றன.
இவற்றை கட்டப்படுத்த மத்திய அல்லது மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு கட்டுப்பாடற்ற சமூக ஊடக சுதந்திரம் உள்ளிட்டவையே விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காரணம் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்காக தேசிய அளவில் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும். தமிழக அரசும் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, குற்றங்கள் பெருகாமல் தடுக்க வேண்டும்.
பட்ஜெட்டின் மூலம் தமிழகம் பயனடைந்திருப்பதாக வானதி சீனிவாசன் கூறியிருப்பதன் மூலம் அவரே மத்திய பாஜக அரசையும், நிதியமைச்சரையும் கேலி செய்திருக்கிறார் என்று தான் பார்க்க வேண்டியிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். மாநில அரசுகள் எடுத்தால் அதனை ஆய்வு என்ற அடிப்படையிலேயே மத்திய அரசு கருதுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
எனவே, மத்திய அரசே கணக்கெடுப்பு நடத்தினால் அனைத்து மாநிலங்களுக்கும் ஆதாரப்பூர்வமானதாக இருக்கும். மாநில அரசும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விசிக கோரிக்கை வைத்திருக்கிறது. இதை அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT