Published : 08 Feb 2025 08:28 AM
Last Updated : 08 Feb 2025 08:28 AM

வியூக வகுப்பாளர்களை வளைக்கும் தமிழக அரசியல் கட்சிகள்!

கொள்கை, தொண்டர் பலம், வாக்குறுதிகள், வாக்கு வங்கி இவற்றை எல்லாம் நம்புவதைவிட அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வியூக வகுப்பாளர்களையே மலைபோல் நம்பி நிற்கின்றன. 2012 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், மோடியின் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோர் வியூக வகுப்பாளராக களமிறங்கினார். சர்வதேச அளவிலான அரசியல் வியூகங்களை அறிந்திருந்த பிரசாந்த் கிஷோர், வளர்ச்சி கோஷங்களை முன்னிறுத்தி வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகம் மோடியை குஜராத்துக்கு முதல்வராக்கியது.

இதன் தொடர்ச்சியாக 2014-ல் என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளும் பிரசாந்த் கிஷோரின் வியூகத்தை பின்பற்றி வென்றன. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, ‘நமக்கு நாமே நடைபயணம்’ மூலம் திமுக-வை தேர்தலுக்கு தயார்படுத்தியவர், ‘மைண்ட் ஷேர் அனலிடிக்ஸ்’ நிறுவனத்தின் சுனில் கனுகோலு.

பிரசாந்த் கிஷோரோடு பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், 2021 தேர்தல் நெருக்கத்தில் அதிமுக-வுக்காக வியூகம் வகுத்துக் கொடுத்தார். அப்போது பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் டீம், ‘ஸ்டாலின் தான் வாராரு... விடியல் தரப் போறாரு...’ என்ற கோஷத்துடன் ஸ்டாலினை முன் நிறுத்தியது.

அந்தத் தேர்தலில் திமுக பெற்ற வெற்றி, பிரசாந்த் கிஷோரை பிரமாதமாகப் பேச வைத்தது. ஆனால், அதன் பிறகு வியூகம் வகுக்கும் பணிகளைக் குறைத்துக் கொண்ட கிஷோர், தனியாக கட்சி தொடங்கி பிஹார் அரசியலில் தடம்பதித்தார். ஆனால், இத்தனை பேருக்கு வெற்றி வியூகம் வகுத்துக் கொடுத்த கிஷோரால் இடைத் தேர்தலில் தனது கட்சிக்கு டெபாசிட்டைக் கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் போனது தனிக்கதை.

கடந்த கால நிகழ்வுகள் இப்படி இருக்க, 2026 பொதுத்தேர்தலை எதிர்கொள்ள தற்போதே வியூக வகுப்பாளர்களை வளைக்கத் தொடங்கி விட்டன தமிழகத்தின் பிரதான கட்சிகள். இது குறித்து விளக்கிய அரசியல் திறனாய்வாளர் ஒருவர், “2026 சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் பணியை ராபின் சர்மா என்பவரின் ‘ஷோ டைம்’ நிறுவனத்திடம் திமுக ஒப்படைத்துள்ளது. இது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்காக வியூகம் வகுத்த நிறுவனம்.

இந்த நிறுவனத்துடன் ஸ்டாலினின் மருமகன் சபரீசனால் இயக்கப்படும் ‘பென்’ நிறுவனமும் பல்வேறு சர்வேக்களை எடுத்து வருகிறது. ஆட்சிக்கான மக்களின் ஆதரவு, உட்கட்சி விவகாரம் என அனைத்திலும் ‘பென்’ டீம் தரும் ரிப்போர்ட் திமுக-வில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

திமுக-வை சமாளிக்க, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்காக வியூகம் வகுத்துக் கொடுத்த ரிஷிராஜ் சிங் நிறுவனத்திடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இதை அறிந்த திமுக, அவர்கள் அதிமுக-வுக்கு வேலை செய்யாமல் இருக்க அந்த நிறுவனத்தையும் வளைக்கும் முயற்சியில் இறங்கியதாகச் சொல்கிறார்கள். இதனால், பிரசாந்த் கிஷோரை பேசிமுடித்திருக்கிறது அதிமுக.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பதில் இருந்து பிரசாந்த் கிஷோர் டீம் தனது வேலைகளை தொடங்கலாம். இதனிடையே, கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சிக் கட்டிலில் அமர வியூகம் வகுத்துக் கொடுத்த சுனில் கனுகோலுவின் ‘மைண்ட் ஷேர் அனலிடிக்ஸ்’ நிறுவனம் அதிமுக-வுக்கு வியூகம் வகுக்கலாம் என்ற பேச்சு எழுந்ததால் உதயநிதியை புரமோட் செய்வதற்கான வியூகங்களை வகுக்க அந்த நிறுவனத்தையும் திமுக வளைத்திருப்பதாகத் தெரிகிறது.

புதிதாக வந்திருக்கும் தவெக-வுக்கு வியூக வகுப்பாளராக வந்துள்ள ஜான் ஆரோக்கியசாமி 2016-ல், ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற கோஷத்துடன் பாமக-வுக்கு வியூகம் வகுத்துத் தந்தவர். இவர் தனது ‘பெர்சானா டிஜிட்’ நிறுவனத்தின் மூலம், 2021 சட்டபேரவைத் தேர்தலில், கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் ஏற்பாட்டில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்து 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளக் காரணமாக இருந்தவர். இப்போது இவரோடு ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்பும் சேர்ந்து விஜய்க்கு வியூகம் வகுக்கத் தயாராகி வருகிறது.

தமிழக பாஜக-வைப் பொறுத்தவரை வெளியிலிருந்து வரும் வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பாமல் பி.எல்.சந்தோஷ் தலைமையில், சங்க பரிவார் நிர்வாகிகளைக் கொண்ட குழு மூலம் தேர்தல் வியூகங்களை வகுத்து செயலாற்றி வருகிறது. ‘ஒன் மேன் ஷோ’ வாக விளங்கும் நாதக சீமான், பேசுவதெல்லாமே வியூகமாக அமைந்து போவதால் அவர் தனக்கென எந்த வியூக வகுப்பாளரையும் வைத்துக் கொள்ளவில்லை” என்றார். இந்த பிரபல நிறுவனங்களைத் தவிர மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வே குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. ஆக, எந்தக் கட்சியும் மாண்புமிகு வாக்காளர்களை நம்பவில்லை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x