Published : 08 Feb 2025 06:10 AM
Last Updated : 08 Feb 2025 06:10 AM

ஓய்வூதிய திட்ட ஆய்வு குழுவுக்கு எதிர்ப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய தலைமைச் செயலக பணியாளர்கள்

ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணிக்கு வந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட ஆய்வுக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலக பணியாளர்கள் கறுப்பு பட்டை அணிந்து நேற்று பணியாற்றினர்.

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதற்கிடையில், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்க, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் 3 அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழக அரசு சமீபத்தில் அமைத்தது. அக்குழு 9 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் தலைமைச் செயலக பணியாளர்கள் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று தலைமைச் செயலக பணியாளர்கள் பெரும்பாலானோர் கறுப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.

இதுகுறித்து சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாற்றாக புதிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரைக்க அதிகாரிகள் குழு அமைத்ததற்கு தலைமைச் செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தற்போது அமைத்துள்ள அதிகாரிகள் குழு 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த பழைய ஒய்வூதியத் திட்டம் அமல் என்ற வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக உள்ளது.

5-வது இறுதியுமான பட்ஜெட் தாக்கலுக்கு முன் குழுவை அமைத்திருப்பது ஏற்புடையதல்ல. அதிகாரிகள் குழுவுக்கு 9 மாதம் அவகாசம் என்பது, பழைய ஓய்வூதிய திட்டம் எந்த வகையிலும் நிறைவேற்றப்படாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மீண்டும் மீண்டும் அதிகாரிகள் குழு அமைப்பது முதல்வர் மீதான நம்பிக்கையை முற்றாக அழித்துவிட்டது. எனவே, முதல்வர் அமைத்துள்ள அலுவலர் குழுவை உடனே கலைத்துவிட்டு, இனியும் காலம் தாழ்த்தாமல் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x