Published : 08 Feb 2025 06:10 AM
Last Updated : 08 Feb 2025 06:10 AM

தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது: உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

புதுடெல்லி: தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது; அவ்வாறு இருக்கவும் முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் பல்வேறு மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், ‘‘தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 12 மசோதாக்களில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது ஏன்? எஞ்சிய 10 மசோதாக்களை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது ஏன்? இதுதொடர்பாக ஆளுநர் தரப்பில் ஆதாரப்பூர்வமாக விளக்கவேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

அதன்படி, இதே அமர்வில் இந்தவழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்: ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி: துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள நடைமுறை மத்திய சட்டத்துக்கும், அதன் விதிமுறைகளுக்கும் எதிராக இருக்கும்போது, அதற்கு
ஆளுநர் எப்படி ஒப்புதல் அளிப்பார்? பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகுறித்து ஆலோசிக்க துணைவேந்தர்களின் மாநாட்டை ஆளுநர் கூட்டியபோது, அதில் பங்கேற்க கூடாது எனதுணைவேந்தர்களிடம் தமிழக அரசு கூறுகிறது. யுஜிசி விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படும் துணைவேந்தர்களின் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சிக்கிறது.

நீதிபதிகள்: பல்கலைக்கழக மசோதா, மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படித்தான் செயல்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்? மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது; இருக்கவும் முடியாது. அந்த முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். ஆளுநர் எதுவுமே கூறாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டால், அவர் மனதில் இருப்பது அரசுக்கு எப்படி தெரியும்? ‘நான் ஒப்புதல் தராமல் மசோதாக்களை தடுத்து நிறுத்துகிறேன். மறுபரிசீலனை செய்யுமாறு உங்களை (மாநில அரசை) கேட்கமாட்டேன்’ என ஆளுநர் கூறினால் அதில் என்ன அர்த்தம் உள்ளது?

இதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின் இரண்டாம் பகுதியை ஆளுநர் நீர்த்துப்போக செய்துள்ளார். அவர் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டதாகவே தெரிகிறது. ஆளுநர் இதுதொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். அல்லது இந்தந்த மசோதாக்களை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருக்கலாம். மசோதாக்களை கிடப்பில் போட்டு தீங்கு இழைத்துள்ளீர்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மசோதாக்களில் ஆளுநர் கண்டறிந்த ஓட்டைகள்தான் என்ன? எதற்காக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார் என்பதற்கான காரணத்தை காட்ட வேண்டும். குடியரசுத் தலைவருக்கு மசோதாக்களை பரிந்துரைக்கும்போது ஆளுநர் என்ன காரணம் கூறியுள்ளார். எந்த காரணத்தையும் கூறாமல் பரிந்துரை செய்திருந்தால் குடியரசுத் தலைவரே கேட்டு தெரிந்து கொள்வாரா?

ஆளுநர் தரப்பு: ஆளுநரிடம் அல்லது குடியரசுத் தலைவரிடம் ஒரு மசோதா நிலுவையில் இருக்கும்போது அது சட்டப்பேரவையில் காலாவதி ஆகாது. எனவேதான் அதுதொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை.

நீதிபதிகள்: உங்கள் வாதப்படியே மசோதாக்களை நிறுத்தி வைப்பதாக இருந்தால் பல்கலைக்கழகங்களின் நிலைமை என்ன ஆவது. துணைவேந்தர்களை நியமிக்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம், கல்வித்தரம் என்ன ஆகும். ஒரு மசோதா சரியானது அல்ல என கருதினால் ஒரேயடியாக நிராகரிக்கலாமே. அதைவிடுத்து நிறுத்தி வைப்பது ஏன்? அரசியல் சாசன பிரிவுகள் 200, 201-ன் சட்ட விதிகளின்படி அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும். இறுதி விசாரணை பிப்ரவரி10-ம் தேதி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x