

ஊதிய பலன்கள் அரசாணை குறித்து ஒரே மாதிரியான கருத்தை மருத்துவ சங்கங்கள் தெரிவித்தால் நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளார்.
‘மருத்துவர் லட்சுமி நரசிம்மனின் உயிர்த் தியாகத்துக்கு மதிப்பில்லையா?’ என்ற தலைப்பில் அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போரட்டக்குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதிய கட்டுரை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நேற்று வெளியாகி இருந்தது.
இந்நிலையில், கட்டுரையில் கூறப்பட்ட கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மருத்துவர் ஜெ.சங்குமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சுகாதாரத் துறையில் ஊதிய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து, 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி அரசாணை 293 நிறைவேற்றப்பட்டு ஊதிய பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவ சங்கங்களில் சில, அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து, சுகாதாரத் துறை அமைச்சரை அணுகிய போதெல்லாம் கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட முறை, கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவ சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல்வேறு மருத்துவ சங்கங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக தீர்வு எட்டப்படவில்லை. ஒற்றுமையுடன் ஒத்த கருத்தை தெரிவிக்கும் மருத்துவ சங்கங்களின் கோரிக்கை நிறைவேற்ற அரசு இன்றைக்கும் தயாராக உள்ளது.
மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கடந்த 2020-ம் ஆண்டு பிப்.7-ம் தேதி காலமானார். கருணை அடிப்படையில் பணி வேண்டி விண்ணப்பம், அவருடைய வாரிசுதாரரிடமிருந்து இதுநாள் வரை துறைக்கு பெறப்படவில்லை. சுகாதாரத்துறை அமைச்சர் கவனத்துக்கு இந்த பிரச்சினை வந்தவுடன், தாயன்புடன், மருத்துவர் லட்சுமி நரசிம்மன் வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அவர்கள் பணியேற்க முன் வரவில்லை.
பணியின்போது உயிரிழந்த 6 மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.6 கோடி நிதி உதவி கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி அமைச்சரால் வழங்கப்பட்டது. அதில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் குடும்பத்தினரும் நிதி உதவியை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையப்பெற்ற இந்த அரசு, மருத்துவ துறையை மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக மாற்றி, உலகளவில் பெருமை அடைய வைத்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எத்தகைய கோரிக்கையும் நிறைவேற்ற தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.