

திருநெல்வேலி: நிதியும் கிடையாது, நீதியும் இல்லை என்று மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நெல்லையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.8,772 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசியதாவது: 2023-ல் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டோம். ஆனால், இடைக்கால நிதியுதவியைக் கூட வழங்கவில்லை. நீதிமன்றத்தை நாடிய பின்னரே ரூ.276 கோடி மட்டும் வழங்கினர். தமிழகம் கேட்ட ரூ.37,904 கோடியில் ஒரு சதவீதத்தைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனாலும், மாநில அரசின் நிதியில் பணிகளை மேற்கொண்டோம்.
நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டிலாவது நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் இல்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். தமிழகத்தை தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிக்கிறது. பாஜக கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் நிதி ஒதுக்குவார்களா?
தேர்தல் நேரத்தில் வாக்குகேட்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதும் என்று கருதுகிறார்கள். பொதுவாக திருநெல்வேலி அல்வா உலகப் புகழ்பெற்றது. ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்றதாக இருக்கிறது. ஆனால், மத்திய அரசைப் பொருட்படுத்தாமல், நமக்கு நாமே என்ற பாணியில் தமிழகத்தை மேம்படுத்தி வருகிறோம். அதனால்தான், மத்திய அரசு வெளியிடும் எல்லா புள்ளிவிவரங்களிலும் தமிழகம் முன்னணியில்இருக்கிறோம். சென்னை, கோவை மட்டுமின்றி, தென் தமிழகத்திலும் பிரம்மாண்ட தொழிற்சாலைகளை அமைத்து, லட்சக்கணக்கான இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. அடுத்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களின் வளர்ச்சி புலிப் பாய்ச்சலாக இருக்கும்.
இப்படி ஒரு பக்கம் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கும்போது, மறுபக்கம் தமிழக வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, எம்.பி. ராபர்ட் புரூஸ், எம்எல்ஏ-க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், ரூபிமனோகரன், மேயர் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நெல்லை ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் வரவேற்றார்.
சைகையால் மறுப்பு... விழா மேடையில் பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முன்வரிசையில் இடம் அளிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் பேசும்போது, “கனமழையால் தென்மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது, மத்திய அமைச்சர்கள் பார்வையிட வந்தார்கள். ஆனால், அவர்கள் இடைக்கால நிதியுதவியைக்கூட வழங்க ஏற்பாடு செய்யவில்லை. இந்த உண்மை நயினார் நாகேந்திரனுக்குத் தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார், நீங்கள் பேசுங்கள் என்று எனக்கு அனுமதி கொடுப்பார்” என்றார். உடனே நயினார் நாகேந்திரன் தனது கையை அசைத்து, முதல்வர் குறிப்பிடுவதுபோல இல்லை என்பதுபோல் சைகையால் மறுப்புத் தெரிவித்தார்.