

சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஒருவர் 2022-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் பள்ளிக்கு தீ வைக்கப்பட்டு, உடமைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கடந்த இரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில், 53 சிறுவர்கள் உட்பட 916 பேர் மீது, 24,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸார் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் நீதிமன்றங்களில் நேற்று தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் மாணவியின் தாயார் செல்வி முதல் குற்றவாளியாகவும், விசிகவைச் சேர்ந்த திராவிடமணி இரண்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சிறுவர்கள் 53 பேர் மீதான விசாரணை மட்டும் விழுப்புரம் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 51 சிறுவர்கள் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதி (பொறுப்பு) ராதிகா விசாரணை நடத்திய பின்னர், வழக்கை வரும் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.