Last Updated : 24 Jan, 2014 10:00 AM

 

Published : 24 Jan 2014 10:00 AM
Last Updated : 24 Jan 2014 10:00 AM

தேமுதிகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தால், திமுக வெற்றி பாதிக்குமா?

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு 5 இடங்கள் கிடைத்தது போக எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கு எதிர்க்கட்சிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் தேமுதிகவுக்கு, காங்கிரஸ் ஆதரவளிக்கும் பட்சத்தில் திமுக-தேமுதிக வேட்பாளர்கள் இருவரும் சம அளவிலான வாக்குகள் பெறும் நிலை ஏற்படும்.

தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள தேர்ந்தெடுக் கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆகும். இதில் தேமுதிகவைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததால் 233 உறுப்பினர்களே உள்ளனர். இந்த பலத்தின் அடிப்படையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு 33.29 புள்ளிகள் (அதாவது 34 உறுப்பினர்களின் வாக்குகள்) பெற வேண்டும்.

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு 151 வாக்குகளும், கம்யூனிஸ்டுகளுக்கு 18 வாக்குகளும், பார்வர்டு பிளாக்குக்கு ஒன்று என 170 வாக்குகள் உள்ளன. மேலும், தேமுதிக அதிருப்தி உறுப்பினர்கள் 7 பேரின் வாக்குகளும் கடந்த தேர்தலைப் போலவே அதிமுக கூட்டணிக்கு விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது தவிர, புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்தார். அவரும் அதிமுகவுக்கு ஆதரவாகவே வாக்களிக்கக் கூடும். அதனால், இந்த தேர்தலைப் பொருத்தவரையில், அதிமுக-வின் பலம் 178 ஆக அதிகரிக்கக்கூடும். அதனால் 5 சீட்டுகளை அதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி எளிதாக பெற்றுவிடும்.

கைவிடப்பட்ட காங்கிரஸ்

திமுக-வால் கைவிடப்பட்டுள்ள காங்கிரஸ், தேமுதிக-வுக்கு கை கொடுத்தாலோ அல்லது காங்கிரஸுக்கு தேமுதிக ஆதரவளித்தாலோ ருசிகரமான திருப்பங்கள் ஏற்படக்கூடும். கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக பல முறை கேட்டுக் கொண்டும் கடைசி நேரத்தில் கனிமொழிக்கு ஆதரவாக காங்கிரஸ் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. 2-வது முன்னுரிமை வாக்கு

சட்டமன்றத்தில் தேமுதிகவுக்கு 21 உறுப்பினர்கள் உள்ளனர் (7 அதிருப்தி நீங்கலாக). காங்கிரசுக்கு 5 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதனால் 26 முதல் முன்னுரிமை வாக்குகள் கிடைத்துவிடும்.

அதேநேரத்தில் திமுக-வுக்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 2 வேட்பாளர்களைச் சேர்த்தால் மொத்தம் 26 முன்னுரிமை வாக்குகள் கிடைக்கும். அப்போது இரு கட்சிகளும் சம அளவிலான வாக்குகளைப் பெற்றிருக்கும். அப்போது, வெற்றி பெற்றவர் யார் என்பது சிக்கலாகிவிடும்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், ‘தி இந்து’ நிருபரிடம் கூறுகையில், “இரு வேட்பாளர்கள் சம அளவில் வாக்குகளைப் பெற்றால், இரண்டாவது முன்னுரிமை (செகன்ட் பிரிபரன்ஸ் வோட்) வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அப்போதும், இரு வேட்பாளர்களும் சமநிலை பெற்றிருந்தால், குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார்” என்றார்.

அதிமுக நிர்ணயிக்கும்

அதிமுகவிடம் அதிக வாக்குகள் உள்ளதால் அக்கட்சி நினைத்தால் திமுக வேட்பாளரையோ, தேமுதிக வேட்பாளரையோ 2-வது முன்னுரிமை வாக்குகளை வைத்து தோற்கடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x