மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!
Updated on
1 min read

மதுரை: சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.

தமிழக அரசின் உடல் உறுப்புதானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. இதில், புதிய மைல் கல்லாக, சென்னைக்கு அடுத்து முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று ஒரு நோயாளிக்கு மருத்துவக் குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

இதுகுறித்து 'டீன்' லெ. அருள் சுந்தரேஷ்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''31 வயதான மதுரை ஆயுதப்படைக் காவலர் மோகன்குமார், தலையில் அடிப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். இவர் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு தகுதியானவர் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், காவலர் மோகன்குமார் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்தனர்.

அவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல், மருத்துவமனையில் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் 42 வயதான மற்றொரு நோயாளிக்கு பொருத்த மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர், கல்லீரல் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு காவலர் மோகன்குமாரிடம் பெறப்பட்ட கல்லீரலை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை நிறைவு செய்தனர். தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் கல்லீரல் தானம் பெற்ற நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது,'' என்றார்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை முதல் முறையாக வெற்றிகரமாக செய்த குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் எஸ்.பத்மநாபன், எஸ்.கார்த்திகேயன், ஏ.சாஸ்தா, ஆர்.வில்லாளன், எஸ்.பாலமுருளி, குடல் மற்றும் இரைப்பை மருத்துவப்பிரிவு மருத்துவர்கள் எம்.கண்ணன், ரமணி, மயக்கவியல் மருத்துவர்கள் கல்யாண சுந்தரம், வைரவராஜன், சண்முகசுந்தரம், செந்தில்குமார், பாலமுருகன், ரமேஷ், பிரமோத், முரளி, ரத்தவங்கி மருத்துவர் சிந்தா செவிலியர்கள் ஜோதி, விஜயலட்சுமி மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேலு, நிலைய மருத்துவ அலுவலர்கள் சரவணன், முரளிதரன் ஆகியோரை டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in