Published : 07 Feb 2025 12:38 PM
Last Updated : 07 Feb 2025 12:38 PM
திருநெல்வேலி: “இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா? அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதுமென்று நினைக்கிறார்களா? இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜக-விடமிருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருநெல்வேலியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: 2023 டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த கனமழையால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரியும். அந்த பாதிப்புகளில் இருந்து மீள மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் நிதி கோரினோம். இரண்டு மத்திய அமைச்சர்கள் தமிழகம் வந்தனர். ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக்கூடாது. அவருக்கும் உண்மைத் தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார். இருப்பினும் மாநில அரசின் நிதிகளை வைத்து, நிவாரணப் பணிகளை நாம் செய்தோம். தொடர்ந்து மத்திய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுத்த மத்திய அரசைக் கண்டித்தோம். அப்போதும் நிதி வரவில்லை. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து பேசினோம், அப்போதும் வரவில்லை. ஏன் நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான், தமிழகத்துக்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தது.
வெள்ள நிவாரணமாக நாம் கேட்டது ரூ.37 ஆயிரத்து 907 கோடி. வேறு வழியில்லாமல் மத்திய அரசு நிதி கொடுத்தது எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.276 கோடி. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காட்டைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. இப்படித்தான் மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. சரிபோகட்டும், இந்த பட்ஜெட்டில் ஆவது தமிழகம் கோரிய நிதியை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்.
தமிழகத்தை மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு. அவர்களைப் பொருத்தவரை கூட்டணியில் இருக்கக்கூடிய மாநிலங்களுக்கும், தேர்தல் வரக்கூடிய மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும், நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாம் கேட்கிறோம். இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழகம் இருந்தால் போதுமா? அரசு வெளியிடுகிற நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? மத்திய அரசின் திட்டங்களில் தமிழகத்தின் பெயர் இருக்க வேண்டாமா?
தமிழகத்துக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க மட்டும் தமிழகத்துக்கு வந்தால் போதுமென்று நினைக்கிறார்களா? இப்படி நாம் கேட்கிற கேள்விகளுக்கு பாஜக-விடமிருந்து எந்த பதிலும் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலகளவில் பேமஸ். ஆனால், இப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் அதைவிட பேமஸாக இருக்கிறது.
மத்திய அரசைப் பொருட்படுத்தாமல், நமக்கு நாமே தமிழகத்தை மேம்படுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு. அதனால்தான் மத்திய அரசு வெளியிடுகிற அனைத்து புள்ளி விவரங்களிலும், தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. அதற்கு காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். மத்திய அரசின் மீது குறை கூறிவிட்டு, எந்த திட்டங்களையும் உருவாக்காமல் நாங்கள் விட்டுவிடவில்லை. நாளுக்கு நாள் புதிய திட்டங்கள் வந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் உருவாக்கிக் கொண்டே இருப்போம், என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT