2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், திருமங்கலம் எம்விஎன் நகர் உள்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில் கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் என்ஜினீயர்ஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் மற்றும் அனராக் பிராபர்ட்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிறுவன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், திருமங்கலம் எம்விஎன் நகர் உள்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் முன்னிலையில் கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ், ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் என்ஜினீயர்ஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் மற்றும் அனராக் பிராபர்ட்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Updated on
2 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திருமங்கலம் எம்விஎன் நகர் உட்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான பகுதிகளை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் பயணச்சீட்டு வருவாய் தவிர, பிற வழிகளிலும் வருவாய் ஈட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக மேம்பாட்டுக்கான இடங்களை அடையாளம் கண்டு, அங்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் எம்விஎன் நகர், நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், சாத்தியக்கூறு ஆய்வு, சந்தை பகுப்பாய்வு, பரிவர்த்தனை ஆலோசனை, கருப்பொருள் திட்டங்கள், நிலப் பயன்பாட்டு அறிக்கை போன்றவற்றை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்புதலுக்காக ஆவணங்களை சமர்ப்பித்தல், செலவு மதிப்பீடு தயாரித்தல், ஒப்பந்த ஆவணங்களைத் தயாரித்தல் போன்ற பணிகளுக்கான ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட்ஸ் ஆர்கிடெக்ட்ஸ் இன்ஜினியர்ஸ் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் மற்றும் அனராக் பிராபர்ட்டி கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் ஆகிய கூட்டு நிறுவனத்துக்கு ரூ.41.87 லட்சம் மதிப்பில் நேற்று வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பு கடிதம் கடந்த ஆண்டு டிச.20-ல் வழங்கப்பட்டது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூட்டு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலம் எம்விஎன் நகர், நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்கு ஆகிய இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. எம்விஎன் நகரில் உள்ள வணிக மேம்பாடு பகுதி, விரைவில் அமையவுள்ள திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் பகுதிகளுடன் இணைக்கப்படும்.

நந்தனத்தில் உள்ள வணிக மேம்பாடு பகுதிகள் தற்போதுள்ள மெட்ரோ நிலையத்துக்கு அருகிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸ்க்கு எதிரேயும் அமையவுள்ளன. ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலைய வணிக மேம்பாடு பகுதி முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். இறுதி விரிவான திட்ட அறிக்கை வரும் மார்ச்சுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in