Published : 07 Feb 2025 08:36 AM
Last Updated : 07 Feb 2025 08:36 AM
அமைச்சர்களை விட பல நேரங்களில் அவர்களது உதவியாளர்கள் தான் ஏடாகூடமாக எதையாவது செய்து கெட்ட பெயரைச் சம்பாதிப்பார்கள். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் உதவியாளர் வினோத்குமாரும் அப்படித்தான் ஒரு சிக்கலில் மாட்டி இருக்கிறார்!
கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள இடையன் கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாத லாரியில் ஒரு கும்பல் கிராவல் மண் கடத்தியது. விஷயமறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆய்வாளரான சிவசக்தி, அந்தக் கும்பலை பிடித்து விசாரணை நடத்தினார்.
அப்போது, பிடிபட்ட நபர்களுக்கு ஆதரவாக போனில் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் நேர்முக உதவியாளர் வினோத்குமார், அந்த நபர்களை விடுவிக்கும்படி வலியுறுத்தினாராம். இது பெரும் சர்ச்சையான நிலையில், வினோத்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதேசமயம், கடத்தல்காரர்களை பிடித்த ஆய்வாளரான சிவசக்தியும் பணியிடம் மாற்றப்பட்டதால் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து சிவசக்தியின் பணி மாறுதல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து குண்டடம் காவல் நிலையத்தில், கிராவல் மண் கடத்தல் தொடர்பாகவும், ஆய்வாளரை மிரட்டிய ஆளுங்கட்சியினர் மற்றும் அமைச்சரின் நேர்முக உதவியாளர் வினோத்குமார் மீதும் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், 11 மாதங்கள் கடந்த பிறகும் இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, புகார் கொடுத்து ஓராண்டு நெருங்குவதை நினைவூட்டும் விதமாக இந்த மாதம் விழா எடுக்க திட்டமிட்டுள்ளனர் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும்!
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநிலச் செயலாளரும், புகார்தாரருமான சதீஷ்குமார், “பதிவெண் கூட இல்லாத லாரியை கிராவல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தி உள்ளனர். நடவடிக்கை எடுக்க முயற்சித்த அதிகாரி சிவசக்தி, பணி செய்யவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார்.
அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டி, அச்சுறுத்தி இருக்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சரின் உதவியாளர் வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தோம். ஆனால், போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிரச்சினை நடந்த சமயத்தில் கண் துடைப்பாக வினோத்குமாரை அவிநாசி வருவாய் ஆய்வாளராக மாற்றினார்கள். எட்டு மாதம் கழித்து மறுபடியும் அவரையே அமைச்சருக்கு நேர்முக உதவியாளராக நியமித்துவிட்டார்கள். இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருக்கின்றன.
புகார் கொடுத்து கிட்டத்தட்ட ஓராண்டாகியும் ஆளும் கட்சியினர் மீதும் அமைச்சரின் உதவியாளர் மீதும் போலீஸார் எஃப்ஐஆர் கூட போடவில்லை. அவர்களுக்கு இதை நினைவூட்டும் விதமாக விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் நூதனமாக விழா எடுக்க இருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து விளக்கம் பெற செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனைத் தொடர்பு கொண்டோம். மறு முனையில் பேசிய அவரது மற்றொரு மூத்த உதவியாளர் செல்லமுத்து, “அந்தப் பிரச்சினைக்குப் பிறகு, வினோத்குமார் அவிநாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், அங்கு பணியில் சேராத அவர், நீண்ட விடுப்பில் இருந்தார். இப்போது மீண்டும் டிசம்பர் மாதத்திலிருந்து அமைச்சரின் உதவியாளராக பணிக்குத் திரும்பியுள்ளார். மற்றவற்றை நேரில் பேசிக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
அமைச்சரின் உதவியாளர் பணியிடத்துக்கு எத்தனையோ பேர் தயாராய் இருக்கையில் சர்ச்சையில் சிக்கி மாற்றப்பட்ட வினோத்குமாரையே மீண்டும் தனக்கு உதவியாளராக அமர்த்திக் கொண்டது ஏன் என்பதை அமைச்சர் சாமிநாதன் தான் விளக்க வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT