டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: சுகாதாரத்துறை விளக்கம்

டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது: சுகாதாரத்துறை விளக்கம்
Updated on
1 min read

அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்படாது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிறுநீரக செயலிழப்புக்குள்ளான நோயாளிகளின் உயிரை காத்திட, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வரை, ‘ஹீமோ டயாலிசிஸ்’ என்ற ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்த சிகிச்சையை மேற்கொள்ள சிறுநீரக மருத்துவர்கள், ரத்தநாள மருத்துவ நிபுணர்கள், இதய மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களின் ஆலோசனையும், கண்காணிப்பும் அவசியம். ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை டெக்னீசியன்களும் அவசியம்.

இந்த சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு தொடர்ந்து ரத்த பரிசோதனைகளும் தேவைப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் டயாலிசிஸ் மையங்களை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு, மருத்துவர்கள் சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது. அவற்றை தொடர்ந்து அரசே நடத்தும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் கூறியதாவது:

சிறுநீரக செயலிழப்புக்கு உள்ளானவர்களுக்கு, ரத்த சுத்திகரிப்புக்கான டயாலிசிஸ் சிகிச்சை, பெரும்பாலான அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கான தொழில்நுட்பம், பணியாளர்கள் போதிய அளவில் உள்ளனர். டயாலிசிஸ் சிகிச்சை முறை, அரசு மருத்துவமனைகளில் சிறப்பாக செயல்படுகிறது. எனவே, தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்பது வதந்தி. தொடர்ந்து அரசே, டயாலிசிஸ் சிகிச்சை முறையை செயல்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in