

போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.8,792 கோடி நிதி நெறிமுறைப்படி ஒதுக்கப் படவில்லை என்றும், பத்திரப்பதிவுத் துறையில் சொத்துக்களை குறைவாக மதிப்பிடுதல், ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்றவை மூலம் ஓராண்டில் ரூ.1,271 கோடிக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் இந்திய கணக்குத் தணிக்கையாளர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் 2012-13ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு துறைகளில் நடந்துள்ள முறை கேடுகள், வரவு செலவு குறித்த ஆய்வு முடிவுகள் அதில் இடம் பெற்றுள்ளன. பத்திரப்பதிவுத் துறை தொடர்பாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சொத்துக்களை குறைவாக மதிப்பிடுதல், ஆவணங்களை தவறாக வகைப் படுத்துதல் மற்றும் இதர முறைகேடுகள் போன்ற ரூ.224.26 கோடி அளவிலான நிதி விளைவுகளை பற்றிய தகவல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2007 முதல் 2012 வரை) தணிக்கை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றுள் ரூ.30.72 கோடிக்கான பரிந்துரைகளை துறை ஏற்றுக் கொண்டு, ரூ.11.34 கோடியை வசூலித்தது.
தணிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட இனங்களின் வசூல் நிலையைக் கண்காணிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தவும் வசூலைத் துரிதப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.
இதேபோல் ஏப்ரல் 2012 முதல் மார்ச் 2013 வரையிலான காலங்களில் 135 துறை அலுவலகங்களில் பதிவுருக்களை நாங்கள் ஆய்வு செய்தோம். இதில் 351 இனங்களில், ரூ.1,271.27 கோடி மதிப்புக்கு சொத்துக்களை குறைவாக மதிப்பிடுதல், ஆவணங்களைத் தவறாக வகைப்படுத்துதல் மற்றும் இதர முறைகேடுகளைக் கண்டறிந்தோம். அந்த ஆண்டில் 85 இனங்களில் ரூ.1.80 கோடி அளவுக்கு குறைவாக வரி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதையும் மற்றும் சில குறைபாடுகளையும் துறை ஏற்றுக் கொண் டது. அதில் ரூ.62.62 லட்சம் உள்ளடக்கிய 24 இனங்கள் இந்த ஆண்டிலும், மற்றவை முந்தைய ஆண்டுகளிலும் சுட்டிக் காட்டப் பட்டவை ஆகும். இந்த இனங்களில் ரூ.1.14 கோடி வசூலிக்கப்பட்டது.
மின்னணு முத்திரைகளின் (இ-ஸ்டாம்ப்ஸ்) மறுஉபயோகம் மற்றும் தவறான உபயோகத்தைத் தவிர்க்க, கணினி முறை களின்படி வழங்கப்பட்ட 1,571-க்கும் மேற்பட்ட மின்னணு முத்திரைகள் முறையாக ‘லாக்’ செய்யப்படவில்லை.
வில்லங்கச்சான்று தாமதம்
வில்லங்கச் சான்றிதழ்களை அளிப் பதற்காக 22 சார் பதிவாளர் அலுவலகங்களில் பெறப்பட்ட 20,367 விண்ணப்பங்களைப் பொறுத்தவரை, அதைத் தேடுவதற்கு 4 நாட்கள் முதல் ஒரு வருடம் வரை காலதாமதம் ஏற்பட்டிருந்தது. 5 நாள் தாமதத்துக்கு மின் தடை, அதிக வேலைப்பளு, மனிதவளக் குறை பாடு போன்றவை காரணமாக இருக்கலாம் என்று அரசு பதிலளித்தது.
ஓராண்டுக்கு மேலான தாமதத்துக்கு சாப்ட் வேரில் உள்ள சிறிய குறைபாடே காரணம் எனத் தெரியவந்தது. எனவே, இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இது தவிர, 2012-13-ம் ஆண்டில், தமிழகத் திலுள்ள 8 போக்குவரத்து கழகங்களும் ஓய்வூதியத்துக்கான ரூ.8,792.40 கோடி பொறுப்புகளை கணக்கு நெறிமுறைப்படி ஒதுக்கவில்லை. இவ்வாறு தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.