அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனை
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு நேற்று 3 மணி நேரம் குரல் பரிசோதனை நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை உறுதி செய்ய, ஆய்வகத்தில் குரல் பரிசோதனை செய்வதற்கு சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து ஞானசேகரனிடம் குரல் பரிசோதனை செய்ய அனுமதி கோரி சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சுப்பிரமணியன், பிப்.6-ம் தேதி ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்த அனுமதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று அவருக்கு குரல் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்காக அவர் புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள தடயவியல் துறை கூடத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் காலை 10.30 முதல் 1.30 மணிவரை 3 மணி நேரம் குரல் பரிசோதனை நடைபெற்றது. பின்னர், அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அறிவியல்பூர்வமாக குற்றத்தை நிரூபிக்கும் வகையில் இந்த குரல் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது புலனாய்வுக்கு மேலும் வலுசேர்க்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குரல் சோதனை செய்வது எப்படி? - அதிக முக்கியத்துவம் கொண்ட வழக்குகளில் மட்டுமே குரல் பரிசோதனை (வாய்ஸ் அனலைஸ்டு) மேற்கொள்ளப்படும். குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட நபரின் குரல் ஒரு முக்கிய சாட்சியமாக அமையும், அல்லது அவரது குரல்தான் என்பது நிரூபிக்கப்படுவதன் மூலம் குற்றத்தை நிரூபிக்கவோ, அடுத்த கட்டத்துக்கு வழக்கை நகர்த்தவோ முடியும் என்றால் மட்டுமே குரல் பரிசோதனை நடத்தப்படும்.

இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபரை ஆய்வகத்துக்கு வரவழைத்து அவரை வெவ்வேறு விதமாகவும், சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவத்தில் அவர் பேசியதாகக் கூறப்படும் பகுதியை எழுதிக்கொடுத்தும், விதவிதமாகப் பேசச் சொல்லியும் பதிவு செய்வார்கள். குரல் அதிர்வின் அளவு, குரல் ஏற்ற இறக்கங்கள் அளவிடப்படும். ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வித்தியாசக் குறியீடு இருக்கும், அதைக் கண்டறிவதுதான் தடயவியல் அறிவியலாளர்களின் பணி.

ஆய்வு செய்யப்பட்ட குரல் மாதிரியின் முடிவுகள் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தடயவியல் துறை மூலம் நேரடியாக அளிக்கப்படும். அந்த முடிவே காவல்துறையின் ஆதாரமாகக் கருதப்படும். ஆடியோ குற்றம்சாட்டப்பட்டவருடையது எனில், குற்றவாளிக்கு எதிராக அது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in