கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிக்க முடியுமா? தமிழக மக்களிடம் எடுபடாது - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை வரை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பொதுமக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்:மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் இருந்து பாளையங்கோட்டை வரை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று பொதுமக்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின். படம்:மு.லெட்சுமி அருண்
Updated on
2 min read

தமிழகத்தில் சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும், முதல்வராவோம் என்றும் தெரிவிக்கின்றனர். இவையெல்லாம் மக்களிடம் எடுபடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து, மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். முன்னதாக, வண்ணார்பேட்டையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய முதல்வர், அங்கிருந்து வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, திருச்செந்தூர் சாலை வழியாக பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட் வரை 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து சென்று, ரோடு ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்தோருக்கு கை கொடுத்து மகிழ்ந்தார். அப்போது, ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பாளையங்கோட்டையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள தினசரி சந்தைக் கட்டிடத்தை முதல்வர் .ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சந்தையில் ரூ.10.22 கோடியில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், ரூ.14.92 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள், ரூ.14.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், திருநெல்வேலி டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் ரூ.14.97 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், நயினார்குளம் தெற்கு பகுதியை ரூ.11.03 கோடியில் மேம்படுத்தும் பணிகள் என்று மொத்தம் ரூ.66.04 கோடி மதிப்பிலான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரவு 8 மணியளவில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக, அண்மையில் பாஜகவிலிருந்து விலகிய நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர், பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம், அதிமுகவைச் சேர்ந்த இளங்காமணி உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைந்திருப்போரை வரவேற்கிறேன். திமுக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காகப் பணியாற்றும். திமுகவை அண்ணா தொடங்கியபோதே இதை உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

திமுக தொடங்கியபோது தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், தற்போது சிலர் கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்றும், முதல்வராவோம் என்றும் தெரிவித்து வருகிறார்கள். இதெல்லாம் மக்களிடம் எடுபடாது. யார் எப்படிப்பட்டவர்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

தேர்தலில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து 1957 தேர்தலில் திமுக போட்டியிட்டபோது 15 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். இப்படி படிப்படியாக வளர்ந்து 6-வது முறையாக ஆட்சியில் இருக்கிறோம். 2026 தேர்தலில் 7-வது முறை வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் இன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் 45 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், ரூ.1,060 கோடியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளநீர் கால்வாய் திட்டம் மற்றும் ரூ. 1,680 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in