

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் உள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நகராட்சி ஆணையர் அறையில் ஜன.25-ம் தேதி நடந்த வாக்குவாத வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நகரக் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள எனது அறையில் தமிழ் எண்ணுருக்களுடன் கூடிய சுவர் கடிகாரம் (டிஜிட்டல்) உள்ளது. இந்த கடிகாரத்தில் சிறிய அளவிலான ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவை பொருத்தியது யார் என்பதைக் கண்டறிந்து, பொருத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த ஜன.25-ம் தேதி ஆணையர் அறையில், நகராட்சித் தலைவர் பரிதா நவாப்பின் கணவரும், திமுக நகர செயலாளருமான நவாப், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம், அதிமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள், ஏன் திமுக பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பி அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், இருவரையும் ஆணையர் சமாதானம் செய்யும் வீடியோ பதிவு நேற்று (6-ம் தேதி) சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
நகராட்சி ஆணையர் விளக்கம்: இதுதொடர்பாக ஆணையர் கூறியதாவது: நான் விடுப்பில் சென்றிருந்தேன். கடந்த 29-ம் தேதி எனது அறைக்குள் நகராட்சி ஊழியர்கள் வந்தபோது, டிஜிட்டல் கடிகாரத்திலிருந்து பீப் சத்தம் வந்துள்ளது. இதையடுத்து, ஊழியர்கள் கடிகாரத்தைக் கழற்றிப் பார்த்தபோது உள்ளே சிறிய அளவிலான ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக கடிகாரத்தில் இருந்த கேமரா மற்றும் சிப்பை ஊழியர்கள் எடுத்தனர். மேலும் நான் விடுப்பு முடிந்து கடந்த 3-ம் தேதி பணிக்கு வந்தபோது என்னிடம் அவற்றைக் கொடுத்தனர்.
நகராட்சியில் 4 இடங்களில் டிஜிட்டல் கடிகாரம் உள்ள நிலையில் எனது அறையில் ரகசிய கேமராவை எதற்காக பொருத்தினார்கள் என்பது தெரியவில்லை. மேலும், எனது அறையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் திமுக நகரச் செயலாளருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் மட்டும் எப்படி வெளியானது என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி ஆணையர் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் பதிவான வீடியோ பதிவுகள் வெளியாகியிருப்பது, நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.