திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு? - நடந்தது என்ன?

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலப்பு? - நடந்தது என்ன?
Updated on
1 min read

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

காந்தி மார்க்கெட் வடக்கு தையக்காரத் தெருவில் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்தத் தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்ம பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே ஏறிச் சென்று பார்த்தபோது, தண்ணீரில் பாலீத்தின் பையில் சுற்றப்பட்ட மனித கழிவு கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் எல்.ஐ.சி.சங்கர், அதிகாரிகளிடம் தெரிவித்தார். அங்கு வந்த மாநகராட்சிப் பணியாளர்கள் தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப்படுத்தினர். மேலும், அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவினர்.

குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை வீசிச் சென்றவர்கள் யார் என்று திருச்சி கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் வாகன திருட்டு, வழிப்பறி, அடிதடி, கத்திக்குத்து சம்பவங்களில் சிறுவர்கள் சிலர் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இதற்கு இங்கு புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான் காரணம். கஞ்சா போதையில் திரியும் சில நபர்களே, தண்ணீர் தொட்டியில் மலத்தைக் கலக்கும் கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in