வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் மார்ச் 11-ல் ஆஜர்படுத்த வேண்டும்: சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் மார்ச் 11-ல் ஆஜர்படுத்த வேண்டும்: சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் வரும் மார்ச் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கனகராஜும், குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை வன்கொடுமை நீதிமன்றத்தில் விசாரிக்க இயலாது என்று கூறி, வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-க்கு இவ்வழக்கு அண்மையில் மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிபதி பாரதி, வரும் மார்ச் 11-ம் தேதி இவ்வழக்கு விசாரிக்கப்படும் எனவும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் அன்று தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in