மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு: தூத்துக்குடி மாணவியை பரிசோதிக்க ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு: தூத்துக்குடி மாணவியை பரிசோதிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு தொடர்ந்த தூத்துக்குடி மாணவியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு பரிசோதித்து சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த நிவேதா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2022-ல் தாக்கல் செய்த மனு: நான் மாற்றுத்திறனாளி. பிளஸ் 2 முடித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனால் என்னை மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பிரிவுக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. எனவே எனக்கு எம்பிபிஎஸ். மாற்றுத்திறனாளிகள் பிரிவு கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர் என சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி லட்சுமிநாராயணன் இன்று பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 80 சதவீத மாற்றுத்திறனாளி என மத்திய, மாநில அரசிடம் சான்றிதழ் பெற்றுள்ளார். தூத்துக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 40 முதல் 80 சதவீதம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் நீட் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மருத்துவ விதிமுறைகள் கூறுகின்றன. மனுதாரருக்கு 70 சதவீத மாற்றுத்திறனாளி என சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதல்கள் காரணமாக நீட் கலந்தாய்வில் மனுதாரர் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே மனுதாரரை பரிசோதித்து சான்றிதழ் வழங்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை குழு அமைக்க வேண்டும். அந்த குழுவின் முன்பாக மனுதாரர் ஆஜராக வேண்டும். மனுதாரரின் மாற்றுத்திறன், அவரது மருத்துவ படிப்புக்கு இடையூறாக இருக்குமா என பரிசோதனை முடிவில் தெரிவிக்க வேண்டும். இதில் மனுதாரர் தகுதியற்றவர் என்ற முடிவுக்கு அந்த குழு வந்தால், அதற்கா காரணத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in