

கோவை: கோயில்களில் செய்யப்படக் கூடிய பூஜைகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை மக்கள் சேவை மையம் சார்பில், சுயம் திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி வகுப்பு தொடக்க விழா கோவை, காந்திபுரம் பகுதியில் வியாழக்கிழமை (பிப்.6) நடந்தது.
கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் சுயம் என்ற திட்டத்தை தொடங்கி இந்த திட்டத்தை முதற்கட்டமாக 1,000 பெண்களை தொழில்முனைவோராக மாற்ற வேண்டும் என்பதற்காக, பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சியை கொடுத்து, இலவசமாக தையல் இயந்திரத்தையும் வழங்குகிறோம்.
இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று தொடங்கி உள்ளோம். பெண்கள் தங்களுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, அதே சமயம் சுயமாக அவர்கள் தொழில் செய்து சம்பாதிக்க ஏற்றபடி தையல் தொழில் உள்ளது. அதற்கான இலவச பயிற்சியை, வீட்டிற்கு அருகில் கற்றுக் கொள்ள அமைத்துக் கொடுத்துள்ளோம்.
பாலாம்பாள் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சமர்த் திட்டத்தின் ஒதுக்கீட்டை பெற்று இந்த பகுதி பெண்களுக்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். பயிற்சி நிறைவு செய்த பின் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் கோவை பகுதிகளை அதிகமான பெண் தொழில்முனைவோரை உருவாக்க வேண்டும் என்பது எங்களுடைய லட்சியம்.
ஏற்கனவே தையல் இயந்திரம் வழங்கப்பட்டவர்களுக்கு, அதை மெருகூட்டும் விதமாக அவர்களுக்கு எம்பிராய்டரி பயிற்சி போன்ற தையல் தொழில் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் அடுத்த கட்டமாக ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம்.
துணியை சாதாரணமாக தைத்து கொடுப்பதற்கும் அதை வேலைப்பாடு உடைய துணியாக மாற்றி தருவதற்கும் நிறைய மதிப்பு இருக்கிறது. தையல் தொழில் மட்டுமின்றி பெண்களின் விருப்பத்திற்கு ஏற்ப மற்ற தொழில்களும் விரைவில் கற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே, ஊராட்சிகளை, மாநகராட்சியுடன் இணைப்பதற்கு கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதற்கான ஆட்கள் இல்லை. பக்கத்தில் இருக்கும் அனைத்து ஊராட்சிகளையும், மாநகராட்சியோடு இணைத்து கொண்டால், இன்னும் மோசமான நிலையில் இவர்கள் மக்களை கொண்டு சென்று விடுகிறார்கள்.
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தை பொறுத்தவரை திமுக ஆட்சியில் யார் அந்த சார், யார் அந்த கார், என்பதை தொடர்ந்து யாரு வச்ச கேமரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவை அனைத்தும் விடை தெரியாத கேள்விகள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வது மிகவும் வேதனைக்குரியது.
பட்ஜெட் அறிவிப்புகள் மீதான விமர்சனத்தை பொறுத்தவரை பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டிற்கு எதுவுமே இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மாநில அரசு, மத்திய அரசின் நேர்கோட்டில் பயணிக்கிறது என்று விஜய் கூறியிருப்பது சரியானது. தமிழக அரசு ஒரு காலத்திலும் நேர்கோட்டில் பயணிக்கவே இல்லை. அது தான் இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணம்.
கோயில்களில் செய்யப்படக் கூடிய பூஜைகளில் தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு வானதி தெரிவித்தார்.