Published : 30 Jul 2018 12:20 PM
Last Updated : 30 Jul 2018 12:20 PM

‘‘விரல் நோக எழுதியவர்; குரல் தேய பேசியவர்; கால் தேய நடந்தவர்; கருணாநிதி சிங்கம் போல் எழுந்து வர வேண்டும்’’ - நாஞ்சில் சம்பத்

 திமுக தலைவர் கருணாநிதி சிங்கம் போல் எழுந்து வர வேண்டும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் உடல்நிலையில் தற்காலிகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பின் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் சீராகி வருகிறது. மருத்துவக்குழுக்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன.

ஆனால், காவேரி மருத்துவமனையின் முன் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் குழுமினர். இவர்களை கலைந்து செல்லக் கோரி போலீஸார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் சீராக இருப்பதாக கூறப்படுகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, அழகரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை காலை மீண்டும் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், நாஞ்சில் சம்பத் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், “பெரியாரின் தலை மாணாக்கராய், அண்ணாவின் தம்பியாய் விளங்கும் கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன். இளம்பருவத்திலிருந்தே என்னை ஆட்கொண்ட தலைவர் அசைவற்று படுத்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

1986-ல் கோவை சிதம்பரம் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றிய மாநாட்டில் பாரதிதாசன் உருவப்படத்தை திறந்து வைத்து என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 1989 ஆகஸ்டு 17-ம் தேதி என் திருமணத்தை நாகர்கோவிலில் நடத்தி வைத்தவர் கருணாநிதி. 1989 பொதுத்தேர்தலில் காரியாபட்டி களத்தில் திமுகவின் வேட்பாளர் தங்கபாண்டியனை ஆதரித்து காரியாபட்டியில் இரவு 10 மணியிலிருந்து காலை 7 மணி வரை பேசிய என்னை பாராட்டியவர் கருணாநிதி.

அவருடைய நிழலில் வளர்ந்தவன் நான். இன்று அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இரண்டு, மூன்று தினங்களாக தூக்கம் வரவில்லை. விரல் நோக எழுதியவர், குரல் தேய பேசியவர், கால் தேய நடந்தவர் பிடறுகின்ற சிங்கம் போல் எழுந்து வர வேண்டும் என யாசிக்கிறேன்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x