

சென்னை: திமுக ஆட்சியில் நடைபெறும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள மகளிருக்கு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்படும் என்று அதிமுக மகளிரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக மகளிரணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.6) நடைபெற்றது. கட்சியின் மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.கோகுல இந்திரா, எஸ்.வளர்மதி, வி.சரோஜா, வி.எம்.ராஜலட்சுமி முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஜெயலலிதாவின் பிறந்தநாளை (பிப்.24) ஏழை, எளியோர் பயன்பெறும் திருநாளாக எழுச்சியுடன் கொண்டாடுவோம். அன்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அன்னதானம் வழங்குதல், மகளிருக்கான நலதிட்ட உதவிகள் வழங்குவதல், விளைாயாட்டு போட்டிகள் நடத்துதல், மாணவர்களுக்கு கல்வி உபரகணங்கள் வழங்குவதல், இலவச திருமணம் நடத்திவைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் 50 செயல் வீராங்கனைகளை தேர்வுசெய்து, உறக்கமின்றி பணியாற்றி, 2026 சட்டப்பேரவை தேர்தலில் பொதுச்செயலாளர் பழனிசாமியை முதல்வராக்குவோம். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக்கொள்ள பயிற்சி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கட்சி கொள்கை பரப்பு இணை செயலாளர் விந்தியா, மகளிரணி இணை செயலாளர்கள் கனிதா சம்பத், ஏ.எஸ்.மகேஸ்வரி, கு.சித்ரா எம்எல்ஏ, கட்சி செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.