

மதுரை: அரசு மருத்துவமனைகளில் ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களை பின்பற்றி ‘டயாலிசிஸ்’ சிகிச்சையை ‘அவுட் ஸ்சோர்சிங்’ முறையில் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 100-க்கும் மேற்பட்ட அரசு தாலுகா மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகம் செயலிழந்து உயிருக்கு போராடும் நோயாளிகளுடைய உயிர் காக்கும் வகையில் இச்சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழக அரசு மருத்துமனைகளில் 1500-க்கும் மேற்பட்ட டயாலிசிஸ் எந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஒரு எந்திரத்துக்கு ரூ.6 லட்சம் வீதம் சுமார் ரூ.80 கோடிக்கு மேல் அரசு செலவு செய்துள்ளது. இதற்காக சிகிச்சை அளிக்கப்படும் வார்டுகளில் படுக்கைகள், ஏசி வசதிகள், சுத்தீகரிக்கப்பட்ட ஆர்ஓ தண்ணீர் வசதி, மின்சாரம், சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், டெக்னீஷன்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் என்று மிக பிரமாண்ட மருத்துவ கட்டமைப்பு வசதியை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.
இந்நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளில் செயல்பாட்டில் டயாலிசிஸ் சிகிச்சைகளை மருத்துவக்கல்வி இயக்ககம், 'அவுட்சோர்சிங்' முறையில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முன்மொழிவு அறிக்கையை மருத்துவுக் கல்வி இயக்குநர், கடந்த 12.12.2024 தேதி மாநில சுகாதாரத் துறை செயலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த அறிக்கை தற்போது வெளியாகி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மதுரை சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் கூறுகையில், ''தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இந்த கல்லூரிகள் ஆண்டுக்கு 5,250 எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பு மாணவர்களையும், 37 சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த எண்ணிக்கை எந்த மாநிலத்தில் இல்லாதது ஒன்று. தற்போது இந்தியாவிலேயே டாப் நம்பர் 1 இடத்தில் தமிழ்நாடு சிறுநீரகத் துறை வகிக்கிறது.
தமிழத்தில் உள்ள சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் எண்ணிக்கையில் 20 சதவீதம்கூட ஒடிசா, தெலங்கானா மாநிலங்களில் இல்லை. ஆனால், அந்த மாநிலங்களை பின்பற்றி மருத்துவக் கல்வி இயக்குநர் 'டயாலிஸிஸ்' சிகிச்சை அவுட் சோர்ஸிங் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவு அறிக்கையை சுகாதாரத் துறை செயலர் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அரசு மருத்துவமைனைகளில் டயாலிசிஸ் சிகிச்சையை மேற்கொள்ள நிந்தர டயாலிசிஸ் பணியாளர்கள் நியமனம் எப்போது நடைபெறும் என்று மதுரை உயர் நீதிமன்றம், தமிழக சுகாதாரத் துறையை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில், சத்தமில்லாமல் இன்னொரு பக்கம் டயாலிசிஸ் சிகிச்சை துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது.
'டயாலிசிஸ்' சிகிச்சை அவுட் சோர்ஸிங் முறையில் தனியார் மயமாக்கும்போது, முழுமையான அனுபவம் இல்லாத டெக்னீஷன்களை கொண்டு இச்சிகிச்சையை மேற்கொண்டால் அதிக ரத்தம் வீணாகுதல், நோயாளிகள் பாதிக்கப்படுகின்ற அபாயம் உள்ளது. இந்த சிகிச்சைக்கு பொறுமையும், அக்கறையும், அனுபவமும் மிகவும் அவசியம். தனியார் கம்பெனிகளுக்கு டயாலிசிஸ் துறையை ஒப்படைக்கும் முடிவில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு நிதியை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அறியப்படுகிறது.
இதனால் அரசு மருத்துவமனையின் வளர்ச்சிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, அரசு மருத்துவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஊக்கத்தொகையும் கிடைக்காமல் போகும். அரசு மருத்துவமனைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதிப் பற்றாகுறை ஏற்படும் அபாயம் ஏற்படும். உயிர்கொல்லி மதுவை (டாஸ்மாக்) தன் வசம் அரசு வைத்துக்கொண்டு, சுகாதாரத் துறையை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை மாற்றம் செய்து, ஏழை எளியவர்களின் நலன்கருதி கொள்கை முடிவாக முன்னெடுக்க வேண்டும்,'' என்றார்.
மருத்துவத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அவுட் ஸ்சோர்சிங் என்பது தனியார் மயம் கிடையாது. 'டயாலிசிஸ்' சிகிச்சை பெறும் நோயாளிகள் 50 கி.மீ., தொலைவுக்கு பயணம் செய்யக் கூடாது. அதனால், இந்த சிகிச்சையை பரவலாக்கவே அனைத்து அரசு மருத்துவமனைகளில் அவுட் சோர்ஸிங் முறையில் இந்த சிகிச்சையை செயல்படுத்த ஆலோசனைகள் சென்று கொண்டிருக்கிறது'' என்றார்.