

உதகை: உதகையில் வசிக்கும் மக்களின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி அணை முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதால், கோடை சீசன் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்கு பயன்படும் பார்சன்ஸ் வேலி அணை. மேலும், மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் ஆகிய நீர்த்தேக்கங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கம் மொத்தம் 56 அடி கொள்ளளவை எட்டியுள்ளது.
உதகை நகரின் மக்கள் தொகை சுமார் ஒரு லட்சம். பார்சன்ஸ் வேலி அணையிலிருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. உள்ளூரில் உள்ள பிற 9 நீர்த்தேக்கங்களிலிருந்து தினமும் 60 ஆயிரம் லிட்டர் விநியோகிக்கப்படுகிறது. பற்றாக்குறையாக 30 லட்சம் லிட்டர் உள்ளது.
இந்நிலையில், உதகை சுற்றுலா நகரம் என்பதால் நாள்தோறும் வரும் சுற்றுலாப்பயணிகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதனால் தண்ணீர் பற்றாக்குறை 50 லட்சம் லிட்டராக உயர்ந்து வருகிறது. இந்த பற்றாக்குறையை போக்க ரூ.27 கோடி மதிப்பில் மூன்றாம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு உதகை நகருக்கு தண்ணீர் விநியோகிக்கும் உள்ளூர் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளதால், கோடை காலத்தை சமாளித்து விடலாம் என நகராட்சி நிர்வாகம் நம்புகிறது.
ஆனால், தற்போதுள்ள இருப்பு கோடை சீசனின் போது உதகைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது.
தண்ணீர் இருப்பு தாராளம்: உதகை நகராட்சி அதிகாரிகள் கூறும் போது, ''கடந்த டிசம்பர் மாதம் வரை மூக்கூர்த்தி தேசிய பூங்கா போன்ற மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் தொடர்ந்து பெய்த மழையால் பார்சன்ஸ்வேலி அணை முழுக் கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால், மே மாதம் கோடை சீசன் முடியும் வரை உதகைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. தடையில்லா குடிநீர் நகராட்சி சார்பில் தொடர்ந்து வழங்கப்படும். பார்சன்ஸ்வேலி அணை தற்போது முழுக் கொள்ளளவு எட்டி உள்ளதால் தேவைக்கேற்ப நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மேற்கொள்ளவும் இந்த தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது'' என்றனர்.