நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நிறைவில் விவசாயிகள் மாநாடு நடத்த தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தல்

தமிழக பாஜக அலுவலகம் | கோப்புப் படம்
தமிழக பாஜக அலுவலகம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நிறைவில் விவசாயிகள் பேரணி, மாநாடு நடத்த வேண்டும் என தமிழக அரசை பாஜக வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100-வது பிறந்த நாள் இன்று. விவசாயிகளுக்காகப் போராடி வரலாறு படைத்த நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டை முன்னிட்டு, "துடியலூர் - கோவில்பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ.காலனி ரயில்வே மேம்பாலத்துக்கு நாராயணசாமி நாயுடு பெயர் சூட்டப்படும்.

அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாராயணசாமி நாயுடுவை ஒரு விவசாய சங்க தலைவர் என்ற அளவில் மட்டும் கடந்து சென்று விட முடியாது. அறவழியில் போராடி விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுத்த புரட்சியாளர் அவர்.

இன்று விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது என்றால், அதற்கு நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள் தான் காரணம். இன்று தமிழகத்தில் இத்தனை விவசாய சங்கங்கள் இருக்கிறது. விவசாய பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கிறார்கள். போராடுகிறார்கள் என்றால் அதற்கு நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள் தான் காரணம்.

தமிழக விவசாயிகள் வரலாற்றில், தமிழகப் போராட்ட கள வரலாற்றில் மிக மிக முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. அவரது வாழ்க்கை விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒர் பாடம். எனவே அவரது நூற்றாண்டையொட்டி நினைவு வளைவு அமைப்பது, ரயில்வே மேம்பாலத்துக்கு பெயர் வைப்பதோடு மட்டும் நின்று விடாமல், அவரது வாழ்க்கை வரலாற்றை, போராட்ட குணத்தை, தமிழக மக்களிடம் குறிப்பாக, விவசாயிகள், இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும்.

அதற்காக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாராயணசாமி நாயுடு குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அவரது நூற்றாண்டு நிறைவில் மிகப்பெரிய விவசாயிகள் பேரணியுடன், மாநாட்டையும் தமிழக அரசு நடத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in