Published : 06 Feb 2025 01:37 PM
Last Updated : 06 Feb 2025 01:37 PM

கிளாம்பாக்கம் | பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது

கிளாம்பாக்கம்: பெண்ணை ஆட்டோவில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு செல்ல பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திங்கட்கிழமை ( 3.2.2025) இரவு வந்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரை, ஆட்டோ ஓட்டுநர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். மாதவரம் செல்ல வேண்டும் என்று அந்த பெண் கூற, தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாகக் கூறி ஆட்டோவில் ஏறுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார். அந்த பெண் மறுக்கவே, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஓட்டுநர் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

ஆட்டோ வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்ற போது ஆட்டோ ஓட்டுநர், தனது நண்பர்களுக்கு போன்செய்து வர சொல்லியுள்ளார். இதையடுத்து, நண்பர்கள் இருவர், வண்டலூர் அருகே அதே ஆட்டோவில் ஏறியுள்ளனர். பின்னர், அந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த பெண், தனது தோழியின் கணவருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீஸார் ஆட்டோவில் செல்லும் பெண்ணின் செல்போன் டவரை கண்காணித்து ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். போலீஸார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர், மதுரவாயல் அருகே மாதா கோயில் தெருவில் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பெண்ணை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினார். தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடினார். இந்த சம்பவம் குறித்து வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், "இந்த சம்பவத்தில் தொடர்புடைய முத்தமிழ்செல்வன், தயாளன் என்ற இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவரை தேடி வருகிறோம். இதில் முத்தழிழ் செல்வன், பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றியவர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு: இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கிளாம்பாக்கம் பகுதி சமூக ஆர்வலர்கள், "வெளியூர்களிலிருந்து வரும் பேருந்துகள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் செல்வதில்லை. பேருந்து நிலையத்துக்கு வெளியே ஜிஎஸ்டி சாலையில் அவர்கள் இறக்கிவிடப்படுகிறார்கள். இதனால் ஜிஎஸ்டி சாலையில் இருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல பலரும் ஆட்டோவில் பயணம் மேற்கொள்கின்றனர். இதன் காரணமாகவே இத்தகைய விபரீதங்கள் ஏற்படுகின்றன.

பொதுமக்கள் இறங்கும் இடத்தில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. சாலையை கடப்பதற்கு உதவ மட்டுமே இரண்டு போலீஸார் நிற்கின்றனர். பொதுமக்கள் அதிகமாக இருக்க கூடிய இடத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. எனவே, பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் செல்ல வேண்டும். இல்லையென்றால் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும். சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும். பயணிகளுக்கு முறையான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x