Published : 06 Feb 2025 09:00 AM
Last Updated : 06 Feb 2025 09:00 AM
திருச்சி: காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப் பொருளை தண்ணீரில் வீசிச் சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது பாலித்தின் பையில் சுற்றப்பட்ட மனிதக் கழிவு இருப்பது தெரிய வந்தது.
அதையறிந்த வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனிதக் கழிவை அகற்றிவிட்டு, தொட்டியை முழுமையாக தூய்மைப்படுத்தினர். அப்பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி விட்டு சென்றனர்.
குடிநீர் அல்லாத மற்ற வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை வீசிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து, திருச்சி மாநகர கோட்டை போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
பின்னணி என்ன? 20-வது வார்டு பகுதியில் வாகனத் திருட்டு, வழிப்பறி, அடிதடி, கத்திக்குத்து சம்பவங்களில் தொடர்ச்சியாக சிறார்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதற்கு இப்பகுதியில் தராளமாக புழங்கும் கஞ்சா, மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
கஞ்சா போதையில் திரியும் சில நபர்களே, தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT